ஜூன் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி: 14 சதவீதம் அதிகம்

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த வருவாய் மிதமான அளவில் உயர்ந்திருந்தாலும், இறக்குமதி வரி வசூல் அதனை ஈடுகட்டியுள்ளது.
ஜிஎஸ்டி
Published on

புதுடெல்லி,

நாட்டில் ஜூன் மாதத்திற்கான மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல், ரூ.1,94,812 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 13.9 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வசூல் எண்ணிக்கையை வைத்து பார்க்கும் போது, ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடி என்ற இலக்கை நெருங்கியுள்ளது. இந்த உயர்வுக்கு, இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்ட அதிகரிப்பே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து கிடைத்த வருவாய் மிதமான அளவில் உயர்ந்திருந்தாலும், இறக்குமதி வரி வசூல் அதனை ஈடுகட்டியுள்ளது. உள்நாட்டு பரிவர்த்தனைகள் மூலம் கிடைத்த மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,34,774 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 6.5 சதவீதம் அதிகமாகும். அதேநேரத்தில், இறக்குமதி மீதான ஜிஎஸ்டி வசூல் 34.6 சதவீதம் உயர்ந்து ரூ.60,038 கோடியாக பதிவாகியுள்ளது. மொத்த ஜிஎஸ்டி வசூல் அதிகரிப்பில் இதுவே மிகப்பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளது

.

மாநிலங்களைப் பொறுத்தவரை, உத்தரப் பிரதேசம் ஜூன் மாதத்தில் 19% வளர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. அங்கு ஜிஎஸ்டி வசூல் ரூ.7,675 கோடியிலிருந்து ரூ.9,165 கோடியாக உயர்ந்துள்ளது. அசாம் (17%), பஞ்சாப் (14%), மற்றும் குஜராத் (12%) ஆகிய மாநிலங்களும் வலுவான வளர்ச்சியைக் கண்டுள்ளன. நாட்டின் மிகப்பெரிய ஜிஎஸ்டி பங்களிப்பாளரான மகாராஷ்டிராவில் வரி வசூல் 9% அதிகரித்து ரூ.30,714 கோடியை எட்டியுள்ளது. கர்நாடகாவில் 10% மற்றும் டெல்லியில் 8% வளர்ச்சி பதிவாகியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com