

புதுடெல்லி,
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட்டு நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை 6 மாதம் சிறை தண்டனை விதித்த சுப்ரீம் கோர்ட்டு, அவரை உடனடியாக கைது செய்யுமாறு மேற்கு வங்காள போலீசுக்கு உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த, அவர் ஆந்திர மாநிலம் காளகஸ்தி சென்றதாக தகவல் வெளியான போதிலும் அவர் எங்கு சென்றார் என்பது பற்றி உறுதியான தகவல் எதுவும் இல்லை. இதற்கிடையே, அவரை கைது செய்வதற்காக மேற்கு வங்காள டி.ஜி.பி. சுரஜித்கர் புர்கயஷா தலைமையில் போலீஸ் அதிகாரிகள் குழு ஒன்று கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்தது. அவர்கள் நீதிபதி கர்ணனை தேடி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தநிலையில், நீதிபதி கர்ணன் சார்பில் வக்கீல் மேத்யூஸ் நெடும்பாரா என்பவர் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு ஆஜராகி முறையீடு ஒன்றை தாக்கல் செய்தார். நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு எதிராக கடந்த 9ந் தேதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. கோர்ட்டு அவமதிப்பு தொடர்பாக அனுப்பப்பட்ட நோட்டீசையும் செல்லாது என்று அறிவித்து, அனைத்து விசாரணைகளின் மீதும் தடை விதிக்க கோருகிறேன் எனவும் கர்ணன் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அந்த மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் அறிவித்தார்.
இன்று நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உடனடியாக நிறுத்த சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது. நீதிபதி கர்ணனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டு உள்ள உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு இது தொடர்பாக கோரிக்கை மனுவை தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. எப்போது நீதிபதிகள் இருக்கிறார்களோ அப்போதுதான் விசாரிக்க முடியும் என கூறிவிட்டது.
கர்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவர் (கர்ணன்) நிபந்தனையற்ற மன்னிப்பை வழங்க விரும்புகிறார், ஆனால் சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் அவருடைய மனுவை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார் என கூறிஉள்ளார் என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டு உள்ளது.