

குர்கான்,
டெல்லியை அடுத்த குருகிராம் ரயான் சர்வதேச பள்ளியில் படித்து வரும் 7 வயது இரண்டாம் வகுப்பு மாணவன் பிரத்யுமன் தாக்கூர், கடந்த ஒரு மாத்திற்கு முன்பாக பள்ளி கழிவறையில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பேருந்து ஓட்டுநரின் உதவியாளரான அசோக்குமாரை போலீசார் கைது செய்தனர், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கொலை செய்ததை அசோக்குமார் ஒப்புக்கொண்டதாக கூறினர்.
இது உண்மையல்ல எனக்கூறிய பிரத்யுமன் பெற்றோர் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கூறி போராட்டம் நடத்தினர். சிபிஐ விசாரணை நடத்தியதில் அதே பள்ளியை சேர்ந்த 16 வயது மாணவன் கைது செய்யப்பட்டார், பரீட்சையை தள்ளி வைக்க, சிறுவனை கொன்றது விசாரனையில் தெரியவந்தது.
தற்போது, இந்த வழக்கில் முக்கிய திருப்பமாக குற்றம்சாட்டப்பட்ட 16 வயது சிறுவன் வயது வந்த குற்றவாளியாகவே விசாரிக்கப்படுவார் என்று சிறார் நீதிவாரியம் தெரிவித்துள்ளது. கொலையுண்ட சிறுவனின் தந்தையின் கோரிக்கையை ஏற்று குற்றம்சாட்டப்பட்டவர் வயது வந்த குற்றவாளியாகக் கருதப்பட்டு டிசம்பர் 22-ம் தேதி அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
கொலையுண்ட சிறுவனின் தந்தை தன் கோரிக்கையில், தன் மகனின் தொண்டை அறுக்கப்பட்டுக் கொல்லப்பட்ட விதம் பயங்கரமானது, நினைத்தாலே கொடூரமாக உள்ளது என்று குறிப்பிட்டதையடுத்து இவர் கோரிக்கை ஏற்கப்பட்டு கொலைக் குற்றம்சாட்டப்பட்ட 16 வயது நபர் வயது வந்தவராகவே விசாரிக்கப்படவிருக்கிறார்.