காசி-தமிழகம் உறவின் மையமாக திகழும் ஜோதிலிங்கங்கள் : உத்தரபிரதேச முதல்-மந்திரி பேச்சு

காசி-தமிழகம் உறவின் மையமாக திகழும் ஜோதிலிங்கங்கள் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரியோகி ஆதித்யநாத் கூறினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் வாரணாசியில் நேற்று காசி தமிழ் சங்கமம் தொடக்க நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசினார்.

'உங்களை காசியில் வரவேற்கிறோம்' என்று தமிழில் பேசத்தொடங்கிய அவர் தொடர்ந்து கூறியதாவது:-

'ராமேசுவரம் ராமநாதசாமி-காசியில் உள்ள ஆதி விசுவநாதர் ஜோதிலிங்கங்கள், தமிழ்நாடு-காசி இடையிலான உறவின் மையமாக உள்ளன. ராமபிரான் மற்றும் சிவபெருமானால் ஏற்படுத்தப்பட்ட இந்த உறவை, இந்தியாவின் 4 மூலைகளிலும் புனித பீடங்களை ஏற்படுத்தியதன் மூலம் ஆதிசங்கராச்சாரியார் முன்னெடுத்துச் சென்றார். தற்போது பிரதமர் மோடி முழு சக்தியுடன் அதை முன்னால் கொண்டு செல்கிறார்.

இந்தியாவின் மத, கலாசார மற்றும் ஆன்மிக உணர்வின் மையமாக காசி உள்ளது. அதேபோல பண்டைக்காலம் முதலே தமிழ்நாடு அறிவு, கலை, கலாசாரத்தின் மையமாகத் திகழ்கிறது. பாண்டிய, சோழ, பல்லவ மன்னர்கள் அதை விரிவுபடுத்தியுள்ளனர்.

இந்திய கலாசாரத்தின் அனைத்து அம்சங்களும் காசியிலும், தமிழ்நாட்டிலும் சமமாக பாதுகாக்கப்பட்டுள்ளன. வடக்குக்கும் தெற்குக்கும் இடையிலான பல நூற்றாண்டு கால அறிவு, நாகரீகம் சார்ந்த உறவை உணர்வதற்கான வாய்ப்பாக காசி தமிழ் சங்கமம் அமைந்துள்ளது.

தமிழகத்தின் தென்காசியிலும் காசி விசுவநாதருக்கு பழமையான கோவில் உள்ளது. தென்காசி என்றால் 'தெற்கு காசி' என்று பொருள்.

சிவபெருமானின் வாயில் இருந்து பிறந்ததாக கருதப்படும் மொழிகளான தமிழும், சமஸ்கிருதமும் இலக்கியச் செழுமை வாய்ந்தவை.

காசி தமிழ் சங்கமம் மூலம், நமது தமிழக விருந்தினர்கள், காசி உள்ளிட்ட உத்தரபிரதேசத்தின் கலாசார சிறப்பை உணர்வது மட்டுமின்றி, இந்த வடக்கு-தெற்கு சங்கமத்தின் மூலம் நமது கலாசார ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவ முடியும்.' என்று அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com