பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து சந்திரசேகர் ராவின் மகள் கவிதா சஸ்பெண்ட்

கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
ஐதரபாத்,
பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சியிலிருந்து சந்திரசேகரராவின் மகள் கவிதா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சந்திரசேகரராவின் மகன் கே.டி. ராமராவ், மகள் கவிதா இடையே மோதல் நீடித்த நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.பி.ஆர்.எஸ்.-ஐ அழிக்கும் வகையில் சிலர் செயல்படுவதாக தமது அண்ணன் மீது கவிதா அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.
இத்தகைய சூழலில்தான் கவிதா கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டி பி.ஆர்.எஸ். கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த இடைநீக்கத்தை செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் தனது தந்தை சந்திரசேகரராவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்தோஷ் ராவ் மற்றும் ஹரிஷ் ராவுமே இதற்கு காரணம் என்று கவிதா பேசியிருந்தார். இதற்கு மறுநாளே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






