ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு; இஸ்ரோ தகவல்

ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி இன்று நடைபெற இருந்த நிலையில், சோதனை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்திவைப்பு; இஸ்ரோ தகவல்
Published on

ஸ்ரீஹரிகோட்டா,

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து, மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா டிவி-டி1 ராக்கெட் இன்று காலை 8 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கான இறுதி கட்ட பணியான 13 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 7 மணிக்கு தொடங்கியது.

இந்நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இதன்படி காலை 8 மணிக்கு பதிலாக காலை 8.30 மணிக்கு விண்கலம் விண்ணில் ஏவப்படும். வானிலையில் ஏற்பட்டு உள்ள மாற்றம் காரணத்தினால் விண்கல சோதனையில் தாமதம் ஏற்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

பூமியிலிருந்து புறப்பட்ட ராக்கெட் 8 நிமிடங்களில் திட்டமிட்ட 17 கிலோமீட்டர் என்ற இலக்கை சென்றடையும். அதன் பிறகு அதில் பொருத்தப்பட்டுள்ள விண்கலம் தனியாக பிரிந்து வங்க கடலில் பாராசூட் மூலம் பாதுகாப்பாக இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ராக்கெட்டின் செயல்பாடுகளும், அதில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளின் செயல்பாடுகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

இதனை பார்வையிடுவதற்காக பள்ளி மாணவர்கள் பலர் காலையிலேயே வந்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், ககன்யான் மாதிரி விண்கலம் சோதனைக்கான கவுண்ட்டவுன் நிறுத்தப்பட்டு உள்ளது. கவுண்ட்டவுன் நிறைவடைய 5 வினாடிகள் இருக்கும்போது, அது நின்று போனது. ககன்யான் மாதிரி விண்கலம் ஏவும் பணி இன்று நடைபெற இருந்த நிலையில், சோதனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது.

இதுபற்றி இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களிடம் பேசும்போது, ககன்யான் மாதிரி விண்கலம் சோதனை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. விண்கலம் பாதுகாப்பாக உள்ளது. அதில் நடந்த கோளாறு என்ன என்பது கண்டறியப்படும். அதன்பின்னர் விரைவில் விண்கலம் ஏவப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com