கஜா புயல்; 2வது கட்ட நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.353.70 கோடி ஒதுக்கீடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடி ஒதுக்கியுள்ளது.
கஜா புயல்; 2வது கட்ட நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.353.70 கோடி ஒதுக்கீடு
Published on

புதுடெல்லி,

தமிழகத்தில் கடந்த 16ந்தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் கஜா புயல் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்கள் கடும் பாதிப்படைந்தன.

கஜா புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை, பலா மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது.

ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நிவாரண பொருட்கள் ஆகியவை வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் புதுடெல்லி சென்ற தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி புயல் நிவாரண நிதியாக பிரதமர் மோடியிடம் ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். இதனை அடுத்து மத்திய அரசு புயல் ஆய்வு பணிக்காக மத்திய குழு ஒன்றை அமைத்தது.

தொடர்ந்து, மத்திய அரசு முதல் கட்ட நிவாரண நிதியாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிலையில், இரண்டாம் கட்ட நிவாரண நிதியாக ரூ.353.70 கோடியை மத்திய அரசு இன்று ஒதுக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com