

காக்கிநாடா
ஆந்திர பிரதேசத்தில் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் கிராமத்தில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆலையில் தொழிலாளர்கள் பலர் வேலை செய்து வந்த நிலையில், இன்று அந்த பட்டாசு ஆலையில் பலத்த சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை போராடி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஆந்திராவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என அவர் அறிவித்து உள்ளார்.
இந்நிலையில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு சம்பவ பகுதியை நேரில் சென்று பார்வையிட்டார். அவர், மந்திரிகளையும் மற்றும் மூத்த அதிகாரிகளையும் சம்பவ பகுதிக்கு நேரில் சென்று பார்வையிடும்படி கேட்டு கொண்டார். அவர் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் பற்றியும் கேட்டு அறிந்து கொண்டார்.
இதன் பின்னர் அவர் மருத்துவமனைக்கு நேரில் சென்றார். பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு அரசு முழு ஆதரவு அளிக்கும் .
இந்த சம்பவம் குறித்து சந்திரபாபு நாயுடு கூறுகையில், வேட்லபாலம் கிராமத்தில் நிகழ்ந்த இந்த சம்பவம் மிகுந்த மன வலியை தருகிறது. தொழிலாளர்கள் பலர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும். தேவையான உதவிகளும் உடனடியாக வழங்கப்படும் என்றார்.