மத்திய பிரதேசத்தின் முதல்-மந்திரியாக கமல்நாத், 17-ந்தேதி பதவியேற்பு

மத்திய பிரதேச முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கமல்நாத், 17-ந்தேதி பதவியேற்கிறார்.
மத்திய பிரதேசத்தின் முதல்-மந்திரியாக கமல்நாத், 17-ந்தேதி பதவியேற்பு
Published on

போபால்,

மத்திய பிரதேசத்தில் கடந்த மாதம் 28-ந்தேதி நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை தட்டிப்பறித்தது காங்கிரஸ் கட்சி. மொத்தமுள்ள 230 இடங்களில் 114 தொகுதிகளை கைப்பற்றிய காங்கிரஸ், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பின்னர் 4 சுயேச்சைகள், பகுஜன் சமாஜின் 2 உறுப்பினர், சமாஜ்வாடியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என 121 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க முடிவு செய்தது.

எனினும் அங்கு முதல்-மந்திரி தேர்வில் காங்கிரஸ் தலைமைக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான கமல்நாத் மற்றும் மூத்த தலைவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா இடையே பலத்த போட்டி நிலவியது.

இதில் நீண்ட இழுபறிக்கு பின் நேற்றுமுன்தினம் இரவு கமல்நாத், முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் நடந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், கட்சியின் சட்டசபைக்குழு தலைவராக (முதல்-மந்திரி) அவர் தேர்வானார்.

இதைத்தொடர்ந்து அவர் மாநில கவர்னர் ஆனந்தி பென் படேலை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது மூத்த காங்கிரஸ் தலைவர்களான திக்விஜய் சிங், விவேக் தங்கா, அஜய் சிங், அருண் யாதவ், சுரேஷ் பச்சோரி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சுமார் 50 நிமிடம் நடந்த இந்த சந்திப்புக்குப்பின், மாநிலத்தில் ஆட்சியமைக்குமாறு கமல்நாத்துக்கு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

அதன்படி மத்திய பிரதேசத்தின் 18-வது முதல்-மந்திரியாக 17-ந்தேதி (திங்கட்கிழமை) கமல்நாத் பதவியேற்றுக்கொள்கிறார். தலைநகர் போபாலில் உள்ள லால் அணிவகுப்பு மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் விழாவில் அவருக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார்.

72 வயதான கமல்நாத் காங்கிரஸ் கட்சி சார்பில் 9 முறை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர். கடந்த ஏப்ரல் மாதம் மாநில கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட இவர், சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக பெரும் பங்காற்றினார்.

இதற்கிடையே மத்திய பிரதேச முதல்-மந்திரியாக கமல்நாத்தை நியமித்ததற்கு அகாலிதளம் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. 1984-ம் ஆண்டு நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத் முக்கிய பங்காற்றியதாக கூறி, பஞ்சாப் சட்டசபையில் நேற்று அந்த கட்சி எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

கமல்நாத்தை முதல்-மந்திரியாக நியமித்திருப்பது, சிக்கிய கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல அமைந்திருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர். முன்னதாக கமல்நாத்தின் நியமனத்துக்கு சீக்கிய தலைவர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com