காந்தஹார் சம்பவம், இந்திய வரலாற்றின் மோசமான சரணடைதல்; சுப்பிரமணியன் சுவாமி புத்தகத்தில் குற்றச்சாட்டு

கடத்தப்பட்ட விமானத்தை மீட்பதற்காக 3 பயங்கரவாதிகள் விடுவிக்கப்பட்ட காந்தஹார் சம்பவம், இந்திய நவீன வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் மிகவும் மோசமாக சரணடைந்ததை காட்டுவதாக சுப்பிரமணியன் சுவாமி, தான் எழுதிய எழுதிய புத்தகத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
காந்தஹார் சம்பவம், இந்திய வரலாற்றின் மோசமான சரணடைதல்; சுப்பிரமணியன் சுவாமி புத்தகத்தில் குற்றச்சாட்டு
Published on

பயங்கரவாதி மசூத் அசார்

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார் மற்றும் உமர் ஷேக், முஸ்தாக் அகமது சர்கார் ஆகிய 3 பயங்கரவாதிகள் கடந்த 1999-ம் ஆண்டு இந்தியாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.இவர்களை விடுவிப்பதற்காக அந்த ஆண்டு டிசம்பர் 24-ந்தேதி காட்மாண்டுவில் இருந்து டெல்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை 5 பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானின் காந்தஹாருக்கு கடத்திச்சென்றனர்.

விமானம் கடத்தல்

விமானத்தில் இருந்த 154 பயணிகள் மற்றும் ஊழியர்களை 8 நாட்களாக அங்கே சிறை வைத்திருந்தனர். சர்வதேச அளவில் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், துரிதமாக நடவடிக்கை மேற்கொண்ட அப்போதைய வாஜ்பாய் அரசு, மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளையும் விடுவித்தது.அப்போதைய வெளியுறவு மந்திரி ஜஸ்வந்த் சிங், தனி விமானத்தில் 3 பயங்கரவாதிகளையும் காந்தஹாருக்கு அழைத்து சென்றார். அதன்மூலம் ஏர் இந்தியா விமானமும், பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

கடுமையாக விமர்சனம்

இந்த விவகாரத்தில் பா.ஜனதா தலைமையிலான அப்போதைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. எனினும் பயணிகளின் உயிரை பாதுகாப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அப்போதைய மத்திய அரசு கூறியது.இந்த சம்பவத்தை தற்போது பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமர்சித்து உள்ளார். இது இந்திய நவீன வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் மிகவும் மோசமான சரணடைதல் என அவர் வர்ணித்து உள்ளார். இந்தியாவில் மனித உரிமைகளும், பயங்கரவாதமும் என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள புத்தகத்தில், இது தொடர்பாக கூறியிருப்பதாவது:-

பயங்கரவாத முற்றுகை

பாகிஸ்தான், தலீபான்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான், ஐ.எஸ். உள்ளிட்ட பிற பயங்கரவாதிகள் மற்றும் சீனாவால் ஆதரிக்கப்படும் வடகிழக்கு கிளர்ச்சியாளர்கள் என இந்தியா இன்று பயங்கரவாத முற்றுகையில் உள்ளது. இதுபோன்ற நேரடியான மற்றும் மறைமுகமான கலவையான அச்சுறுத்தல் இந்தியாவின் அமைதியை விரும்பும் மக்களையோ, புவியியல் ஒருமைப்பாட்டையோ இதற்கு முன்பு அச்சுறுத்தியது இல்லை. இந்து நாகரிகத்தை அழிப்பது, இந்து மதத்தை சீரழிப்பது மற்றும் இந்தியாவின் இந்து அடித்தளத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துவது போன்றவையே பயங்கரவாதிகளின் அரசியல் குறிக்கோள் ஆகும். ஆனால் அவர்களின் எந்த கோரிக்கைகளுக்கும் அரசு ஒருபோதும் அடிபணிந்து விடக்கூடாது.

மோசமான விஷயம்

ஏனெனில், கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தை மீட்பதற்காக 1999-ம் ஆண்டு டிசம்பரில் மசூத் அசார் உள்ளிட்ட 3 பயங்கரவாதிகளை விடுவித்தது, அதுபோன்றதொரு பேரழிவை ஏற்படுத்தும் சரணடைதல் ஆகும். நமது நவீன வரலாற்றில் பயங்கரவாதிகளிடம் அடைந்த மிகவும் மோசமான சரணடைதல் ஆகும். அப்போது நீதிமன்ற காவலில் சிறையில் இருந்த அந்த பயங்கரவாதிகளை கோர்ட்டு அனுமதிகூட பெறாமல் வாஜ்பாய் அரசு விடுவித்தது.அதுமட்டுமின்றி அந்த பயங்கரவாதிகள் அனைவரும் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ஒப்படைப்பதற்கு பதிலாக, மூத்த மந்திரி ஒருவரால் பிரதமரின் சிறப்பு விமானத்தில் அரசு விருந்தினர்கள் போல காந்தஹாருக்கே கொண்டு சென்று ஒப்படைக்கப்பட்டனர். இதில் இன்னும் மோசமான விஷயம் என்னவென்றால், விடுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் மூவரும் மீண்டும் பாகிஸ்தானுக்கு சென்று இந்துக்களை கொல்வதற்காக மூன்று தனி பயங்கரவாத அமைப்புகளை உருவாக்கினர்.

இப்படி தனது புத்தகத்தில் சுப்பிரமணியன் சுவாமி விவரித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com