தங்கக்கடத்தலில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது


தங்கக்கடத்தலில் ஈடுபட்ட பிரபல நடிகை கைது
x
தினத்தந்தி 4 March 2025 7:25 PM IST (Updated: 4 March 2025 8:15 PM IST)
t-max-icont-min-icon

துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தமிழில் 'வாகா' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் ரன்யா ராவ் (32). இவர் கன்னடம் மற்றும் தமிழ் சினிமாவில் நடிகையாக நடித்துள்ளார். கன்னட மொழியில் நடிகர் கிச்சா சுதீப்பின் மாணிக்யா என்ற படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். இந்த திரைப்படம் கடந்த 2014ம் ஆண்டில் வெளியானது. அதன்பிறகு ரன்யா ராவ் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் 2016ல் வெளியான ‛வாகா' திரைப்படத்தில் ஹீரோயினாக ரன்யா ராவ் நடித்திருந்தார்.

இந்நிலையில் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த நடிகை ரன்யா ராவ், தனது உடலில் அதிகப்படியான நகையை அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரது உடைமைகளை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் தங்ககட்டிகள் இருப்பது தெரியவந்தது.

அதோடு அவர் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக தங்கநகை, தங்க பிஸ்கட்டை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து நடிகை ரன்யா ராவிடம் இருந்த நகை, தங்ககட்டி என்று மொத்தம் 14.80 கிலோ மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் அவர் 14.80 கிலோ தங்கத்தை துபாயில் இருந்து சட்டவிரோதமாக கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

முன்னதாக கடந்த 15 நாளில் மட்டும் ரன்யா ராவ் 4 முறை துபாய் சென்று வந்துள்ளார். இதனால் அவரது நடத்தையில் சந்தேகம் கிளம்பியதையடுத்து நேற்று துபாயில் இருந்து வந்த அவரிடம் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் பின்னணியில் இன்னும் வேறு பல நபர்கள் இருக்கலாம் என்ற அதிகாரிகள் சந்தேகித்துள்ளனர். இதுகுறித்து வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே நடிகை ரன்யா ராவின் தந்தை ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், அவர் கர்நாடகாவில் ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story