பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு

பெங்களூருவில் நடந்த சித்தா பட நிகழ்ச்சியில் நடிகர் சித்தார்த் பங்கேற்றார். அப்போது அவருக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பெங்களூருவில் நடிகர் சித்தார்த்துக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு
Published on

பெங்களூரு:

'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சிந்துபாத்' உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் நடிகர் சித்தார்த் நடித்துள்ள திரைப்படம் 'சித்தா'. இந்த படத்தில் நிமிஷா சஜயன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை நடிகர் சித்தார்த் தன்னுடைய இடாகி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நேற்று வெளியானது. இந்த நிலையில் 'சித்தா' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக நடிகர் சித்தார்த் பெங்களூரு வந்தார்.

இங்கு நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடிகர் சித்தார்த் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கன்னட அமைப்பினர் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மேடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். காவிரி விவகாரத்தில் கன்னட அமைப்பினர், தமிழ்நாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தமிழ் நடிகரான சித்தார்த்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகத்தில் தமிழ் படங்களை திரையிட கூடாது என்றும், தமிழ் நடிகர்கள் வரக்கூடாது எனறும் கோஷம் எழுப்பினர்.

இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கன்னட அமைப்பினரின் எதிர்ப்பை தொடர்ந்து மேடையில் இருந்து நடிகர் சித்தார்த் வெளியேறினார். இதையடுத்து அந்த நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com