கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்த சுப்ரீம் கோர்ட்டு

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

புதுடெல்லி,

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தலித் சமுதாயத்தைச்சேர்ந்த முருகேசன் என்பவர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த கண்ணகி என்பவரை காதலித்து வந்தார். இருவரும் கடந்த 5-5-2003 அன்று கடலூர் சார்-பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்துகொண்டனர். முருகேசன், கண்ணகியை விழுப்புரம் மாவட்டம், மூங்கில்துறைப்பட்டிலுள்ள உறவினர் வீட்டில் விட்டுவிட்டு அவர், ஸ்ரீமுஷ்ணம் அருகே வண்ணாங்குடிகாட்டிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

கண்ணகியை காணாமல் தேடிய அவரது உறவினர்களுக்கு, அவர்களது காதல் விவரம் தெரியவந்தது. இதையடுத்து, முருகேசனின் சித்தப்பா அய்யாசாமி மூலமாக ஜூலை 8-ம் தேதி முருகேசனையும், மூங்கில்துறைப்பட்டிலிருந்து கண்ணகியையும் அழைத்து வந்தனர். பின்னர் முருகேசன், கண்ணகி ஆகியோரை அருகிலுள்ள மயானத்துக்கு அழைத்துச் சென்று இருவருக்கும் மூக்கு, காது வழியாக விஷத்தை செலுத்தி அவர்களைக் கொலை செய்து, சடலங்களை தனித்தனியாக எரித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருத்தாசலம் போலீசில் தெரிவித்தபோது அவர்கள் நடவடிக்கை எடுக்காததோடு, சம்பவத்தை மூடிமறைக்கும் செயலில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சில நாள்களுக்குப் பிறகு இந்தச் சம்பவம் ஊடகங்களில் வெளியானது. அதன்பின்னர் விருத்தாசலம் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்தனர். அதில் முருகேசன், கண்ணகி ஆகியோர் சாதி மாறி திருமணம் செய்ததால் அவரவர் தரப்பினர் தங்களது பிள்ளைகளை கொலை செய்ததாகக் கூறி இரு தரப்பிலிருந்தும் தலா 4 பேரை கைது செய்தனர்.

ஆனால் இந்தக் கொலைகள் சாதி ஆணவத்தில் நடத்தப்பட்டது என்றும், எனவே, வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டுமென பல்வேறு அமைப்புகள் வலியுறுத்தின. இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு 2004-ம் ஆண்டு மாற்றப்பட்டது. அதே ஆண்டில் சிபிஐ குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில், அப்போதைய விருத்தாசலம் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 15 பேரை வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்த்தது.

கண்ணகி, முருகேசன் ஆணவக்கொலை வழக்கில் 13 பேர் குற்றவாளிகள் என கடலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கண்ணகியின் சகோதரர் மருது பாண்டிக்கு தூக்கு தண்டனையும், இந்த வழக்கில் நடவடிக்கை எடுக்காத போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெகடர் உள்பட 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது. 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கில் கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதே சமயம் கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த ரங்கசாமி, சின்னதுரை ஆகிய இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளான கந்தவேல், ஜோதி, மணி ஆகியோரின் மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com