கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ குழந்தையை கொன்ற கொடூர தாய்: குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு


கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ குழந்தையை கொன்ற கொடூர தாய்: குற்றவாளி என தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு
x
தினத்தந்தி 21 Jan 2026 12:26 PM IST (Updated: 21 Jan 2026 12:29 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ குழந்தையை கொன்ற தாய் குற்றவாளி என்று கோர்ட்டு அறிவித்தது.

கண்ணூர்,

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தையில் பகுதியை சேர்ந்தவர் சரண்யா (வயது 30). இவருக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற ஆண் குழந்தை இருந்தது. இதற்கிடையே சரண்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த நிதின் (34) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. பின்னர் 2 பேரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தனர்.

இதையடுத்து கள்ளக்காதலுக்கு தனது குழந்தை இடையூறாக இருப்பதாக சரண்யா எண்ணினார். இதனால் கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காக, குழந்தையை கொல்ல திட்டமிட்டார். அதன்படி, கடந்த 2020-ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள கடற்கரையில் தடுப்புச்சுவர் போல உள்ள பாறைகளில் குழந்தையை வீசியும், தலையை பாறையில் மோத செய்தும் 2 பேரும் சேர்ந்து கொலை செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் தளிப்பரம்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

இதில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தையை சரண்யா தனது கள்ளக்காதலனான நிதினுடன் சேர்ந்து கொன்றது தெரியவந்தது. பின்னர் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை தளிப்பரம்பு கூடுதல் செசன்ஸ் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்தநிலையில் பெற்ற குழந்தையை கொன்ற சரண்யா குற்றவாளி என்று நீதிபதி பிரசாந்த் அறிவித்தார். அவருக்கான தண்டனை விவரம் இன்று (புதன்கிழமை) தெரிவிக்கப்படுகிறது. அதோடு நிதின் மீதான குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 More update

Next Story