

லக்னோ,
நாட்டில் பல்வேறு மாநிலங்களில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் குறையத் தொடங்கியதையடுத்து, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆண்டு கன்வர் யாத்திரை நடத்த உத்தர பிரதேச அரசு நடவடிக்கை எடுத்து வந்தது. உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்ய நாத் குறிப்பிட்ட நபர்களுடன் ஜூலை 25-ல் இருந்து கன்வர் யாத்திரை நடைபெறும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால், கொரோனா காலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி அளிப்பதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் கூறியிருந்தது.
இந்நிலையில், கொரோனா மூன்றாவது அலை பரவல் அபாயம் மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களை முன்னிட்டு இந்த ஆண்டு கன்வர் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.