

புதுடெல்லி,
‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திவிட்டு, தற்போது போலீஸ் வழக்குகளை சந்தித்து வரும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ மாணவர்களின் சட்ட உதவிக்காக, சுப்ரீம் கோர்ட் மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல் தனது சொந்த பொறுப்பில் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 36 நாட்களாக நீட் முறைகேட்டுக்கு எதிராக நடந்து வந்த மாணவர்களின் போராட்டம் அண்மையில் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பதியப்பட்ட எப்.ஐ.ஆர் வழக்குகளை திரும்ப பெறுவதாக கொடுத்த வாக்குறுதியை மத்திய அரசு இன்னும் முழுமையாக நிறைவேற்றவில்லை என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் குற்றம் சாட்டினர். இதுகுறித்து டெல்லியில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலை, அமைப்பின் செய்தி தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கபில் சிபல், அமைதியான முறையில் போராடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகளை நாடு தழுவிய அளவில் எதிர்கொள்ளவும், அவர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கவும் தனது பங்காக ரூ.1 கோடியை நிதியுதவியாக வழங்குவதாக அறிவித்தார்.
இந்த சட்ட உதவிகளை முறைப்படுத்தவும், பாதிக்கப்பட்ட மாணவர்களை ஒருங்கிணைக்கவும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் புதிய வலைத்தளம் ஒன்று தொடங்கப்பட உள்ளது. இந்தியாவின் எந்தப் பகுதியில் எந்த மாணவர் பாதிக்கப்பட்டுள்ளார், அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது இந்த வலைத்தளத்தில் துல்லியமாக திரட்டப்படும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இலவசமாகவோ அல்லது குறைந்த கட்டணத்திலோ நீதிமன்றங்களில் வாதாட விரும்பும் இந்திய வழக்கறிஞர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கபில் சிபல் பேசுகையில், "அமைதியான முறையில் போராடிய மாணவர்களை சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு பழிவாங்குவதை அனுமதிக்க முடியாது.
என்னைப்போலவே இந்தியா முழுவதும் உள்ள தாராள மனமுடைய வழக்கறிஞர்களும், பொதுமக்களும் இந்த கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் சட்ட உதவி நிதிக்கு தங்களால் இயன்ற நிதியுதவிகளை வழங்க முன்வர வேண்டும்" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு முழுமையாக திரும்ப பெறத் தவறினால், மீண்டும் ஜந்தர் மந்தரில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரித்துள்ளது.