துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு, கார்கே இரவு விருந்து அளிக்க விடாமல் தடை; காங்கிரஸ் குற்றச்சாட்டு

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டிடத்தில் இருந்து அமலாக்க இயக்குனரகத்தின் விசாரணை முடிந்து காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புறப்பட்டு சென்றுள்ளார்.
துணை ஜனாதிபதி வேட்பாளருக்கு, கார்கே இரவு விருந்து அளிக்க விடாமல் தடை; காங்கிரஸ் குற்றச்சாட்டு
Published on

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அமலாக்கத்துறை அலுவலர்கள் பல்வேறு கட்டங்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கடந்த 2-ந் தேதி, டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்தில் உள்ள யங் இந்தியா நிறுவனத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி யங் இந்தியா நிறுவனத்தின் முதன்மை அலுவலரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. அதன்படி, இன்று நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறை அலுவலர்கள் முன்பு மல்லிகார்ஜுன கார்கே ஆஜரானார்

இதுபற்றி காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் இன்று பேசும்போது, மல்லிகார்ஜுக கார்கேவிடம் 6.5 மணிநேரங்களுக்கும் மேலாக விசாரணை நடந்து வருகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு நடுவே அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இது வருத்தத்திற்குரியது.

அவர், எதிர்க்கட்சிகளின் துணை ஜனாதிபதி வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு இரவு 7.30 மணியளவில் இரவு விருந்து கொடுக்கும் முடிவில் இருந்துள்ளார். இது தெளிவான துன்புறுத்தல். அனைத்து மாநிலங்களிலும், பணவீக்கம், வேலை வாய்ப்பின்மை மற்றும் உணவு பொருட்கள் மீது ஜி.எஸ்.டி. விதிப்பு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நாளை பேரணியாக செல்கிறது.

அதற்கு முன்பு மோடி அரசால் நடத்தப்படும் நாடகமிது என்று கூறியுள்ளார். இதற்காக, சோனியா காந்தியின் இல்லம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்திற்கு வெளியே நேற்று பாதுகாப்பு படை வீரர்கள் பலர் குவிக்கப்பட்டனர் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com