

பெங்களூரு,
நாடு முழுவதும் நிலவும் கடும் வறட்சி காரணமாக விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே விவசாயிகள் வங்கிகளில் வாங்கிய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லிக்கு சென்று பல நாட்கள் போராடினார்கள். இதேபோல் மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதற்கிடையே மராட்டியம், உத்தரபிரதேசம், பஞ்சாப் மாநில அரசுகள் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்து உள்ளன.
இதைத்தொடர்ந்து, கர்நாடக அரசும் விவசாயிகள் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள
50 அயிரம் வரையிலான குறுகிய கால பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அம்மாநில முதல் மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார். ஜூன் 20 ஆம் தேதி வரை கடன் பெற்றவர்களுக்கு இந்த கடன் தள்ளுபடி சலுகை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு மூலம் கர்நாடக அரசுக்கு ரூ.8,165 கோடி செலவு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் சித்தராமையா இந்த அறிவிப்பை வெளியிட்டதும் பிரதான எதிர்க்கட்சியான பாரதீய ஜனதா உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளும் வரவேற்றுள்ளன.