கர்நாடகா: ஆடியோ விவகாரம் - குமாரசாமி குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு

மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,வுக்கு லஞ்சம் வழங்க, பேரம் பேசியது தொடர்பாக எழுந்த புகாரை எடியூரப்பா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கர்நாடகா: ஆடியோ விவகாரம் - குமாரசாமி குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அரசு நடக்கிறது. முதல்-மந்திரியாக குமாரசாமி உள்ளார். ஆபரேஷன் தாமரை மூலம் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ.க்களை இழுத்து ஆட்சி அமைக்க பா.ஜனதா முயற்சி செய்து வருகிறது.

தங்கள் கட்சியின் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.50 கோடி வீதம் ரூ.1,000 கோடி வழங்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா குற்றம்சாட்டினார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 12 எம்.எல். ஏ.க்கள் வரை இந்த சட்டசபை கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று தகவல்கள் வெளியானது.

இந்த சூழ்நிலையில் இன்று காலை கர்நாடக முதல்வர் குமாரசாமி அம்மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டார்.

இந்நிலையில், முதல்-மந்திரி குமாரசாமியின் குற்றச்சாட்டுக்கு எடியூரப்பா மறுப்பு தெரிவித்தார். இது குறித்து அவர், நான் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி குமாரசாமி வெளியிட்ட ஆடியோ போலியானது. யார் வேண்டுமானாலும் குரலை மாற்றி ஆடியோவாக வெளியிட முடியும். நான் சபாநாயகருக்கு ரூ.50 கோடி வழங்கிய குற்றச்சாட்டை குமாரசாமி நிரூபித்துவிட்டால், அரசியலை விட்டே விலகிவிடுகிறேன். குமாரசாமி ஒரு நல்ல நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். மக்களின் மதிப்பை காங்கிரஸ் - மஜத கூட்டணி அரசு இழந்துவிட்டதால், பா.ஜனதா மீது பழியைப் போட பார்க்கிறார் குமாரசாமி. சினிமா தயாரிப்பாளரான அவரிடம் இதுபோன்ற சித்தரிப்புக் கதைகள் நிறையவே இருக்கின்றன" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com