சிக்கன் கபாப், மீன் உணவுகளில் ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை - கர்நாடக அரசு உத்தரவு

கர்நாடகத்தில் சிக்கன் கபாப், மீன் வறுவலுக்கு ரசாயன பொடிகளை பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் பஞ்சு மிட்டாய் (காட்டன் கேன்டி), கோபிமஞ்சூரியன் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படும் வண்ண பொடியில் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனில் ரசாயன பொடி பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சிக்கன் கபாப் உள்ளிட்ட எண்ணெயில் பொறிக்கப்படும் சிக்கன் துண்டுகள், மீன் வறுவலுக்கு பயன்படுத்தப்படும் வண்ண பொடியிலும் உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தக் கூடிய வண்ண பொடி பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர துறையினர், சில மாதங்களுக்கு முன்பு சிக்கன் கபாப், எண்ணெயில் பொறிக்கப்பட்ட மீன் வகைகளின் 36 மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பினர்.

அதில் பயன்படுத்தப்படும் வண்ண பொடியில் 'சன்செட் எல்லோ, கார்மோசின்' ஆகிய உடல் நலத்திற்கு கேடு ஏற்படுத்தும் ரசாயனம் கலந்துள்ளது உறுதியாகியுள்ளது. இத்தகைய உணவுகளை சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சிக்கன் கபாப், மீன் வறுவல்களில் இந்த உடல் நலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொடிகளை பயன்படுத்த தடை விதித்து கர்நாடக அரசின் உணவு பாதுகாப்புத்துறை அதிரடி உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி தடை செய்யப்பட்டுள்ள அந்த வண்ண பொடிகளை பயன்படுத்தினால் அத்தகைய கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரசாயனம் கலந்த பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை விதித்த கர்நாடக அரசு தற்போது சிக்கன் கபாப், மீன்வறுவல் உள்ளிட்டவற்றில் ரசாயன பொடி பயன்படுத்த தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com