5 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூர வாலிபர்.. என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை


5 வயது சிறுமியை கற்பழித்து கொன்ற கொடூர வாலிபர்.. என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை
x

வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மர்மநபர் கடத்தி சென்று கற்பழித்து கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் யாதவாடா பகுதியை சேர்ந்த தம்பதி, தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியில் வசித்து வந்தனர். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் இருந்தாள். இந்த சூழலில், சம்பவம் நடந்த அன்று சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டிருந்தாள். சிறிது நேரம் கழித்து சிறுமியின் தாய் வெளியே வந்து பார்த்தபோது அங்கு சிறுமி இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தனது மகளை பல இடங்களில் தேடினார். அப்போது அங்குள்ள பாழடைந்த வீட்டின் கழிவறையில் உடலில் காயங்களுடன் சிறுமி பிணமாக கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமியை மர்மநபர் கடத்தி சென்று கற்பழித்து கொன்றது தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் வாலிபர் ஒருவரை நேற்று மதியம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர், பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த கூலி தொழிலாளி ரித்தேஷ் குமார் (வயது 35) என்பது தெரியவந்தது. வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமியிடம் சாக்லெட் கொடுப்பதாக கூறி கடத்தி சென்று கற்பழித்து கழுத்தை நெரித்து கொலை செய்ததை ரித்தேஷ் குமார் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து போலீசார், அவர் தங்கியிருந்த இடத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த முடிவு செய்தனர். அதன்படி அசோக்நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா மற்றும் போலீசார், ரித்தேஷ் குமாரை அழைத்து கொண்டு அவர் தங்கியிருந்த இடத்துக்கு சென்றனர். அங்கு வைத்து திடீரென்று கீழே கிடந்த கற்களை எடுத்து போலீசார் மீது வீசி ரித்தேஷ் குமார் தாக்குதல் நடத்தினார். இதில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா, 2 போலீசார் காயம் அடைந்தனர்.

அப்போது சப்-இன்ஸ்பெக்டர் அன்னப்பூர்ணா தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து தற்காப்புக்காக ரித்தேஷ் குமாரை நோக்கி சுட்டார். இதில் ரித்தேஷ் குமாரின் மார்பில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

1 More update

Next Story