கொரோனாவை ஒழிப்பதற்காக தெருவில் அக்னி ஹோமம் நடத்திய கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ

கொரோனாவை ஒழிப்பதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ. அபய் பட்டீல் தெருவில் அக்னி ஹோமம் நடத்தினார்.
கொரோனாவை ஒழிப்பதற்காக தெருவில் அக்னி ஹோமம் நடத்திய கர்நாடக பா.ஜனதா எம்.எல்.ஏ
Published on

அக்னி ஹோமம்

சீனாவின் உகான் நகரில் உருவான கண்ணுக்கு தெரியாத கொரோனா வைரஸ் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கொரோனா முதல் அலையை சிறப்பாக கையாண்டது. ஆனால் 2-வது அலையில் இந்தியா சிக்கி தவித்து வருகிறது.குறிப்பாக நாட்டில் கொரோனா பாதிப்பில் 2-வது இடத்தில் கர்நாடகம் உள்ளது. கர்நாடகத்தில் கடந்த மாதம் கொரோனா பாதிப்பு தினமும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இந்த மாதத்தில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து இருந்தாலும், உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. இது அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில் கொரோனாவை ஒழிப்பதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.ஒருவர் தெருவில் அக்னி ஹோமம் நடத்திய சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

அபய் பட்டீல் எம்.எல்.ஏ.

பெலகாவி தெற்கு தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ.வாக பணியாற்றி வருபவர் அபய் பட்டீல். இவர் கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் அவர் அதில் இருந்து மீண்டு வந்தார். இந்த நிலையில் கொரோனாவை ஒழிக்க தனது தொகுதியில் அக்னி ஹோமம் நடத்த போவதாக அபய் பட்டீல் எம்.எல்.ஏ. அறிவித்து இருந்தார்.அதன்படி நேற்று முன்தினம் பெலகாவி தெற்கு பகுதியில் வைத்து அக்னி ஹோமம் செய்யும் நிகழ்ச்சியை அபய் பட்டீல் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். அதாவது ஒரு தள்ளுவண்டியில் மாட்டு சாணம்,கற்பூரம், வேப்பிலை மற்றும் மூலிகை பொருட்களை போட்டு அபய் பட்டீல் எம்.எல்.ஏ. தீ வைத்தார்.

மாட்டு சாணம், வேப்பிலை

அதில் இருந்து எரிந்த தீ புகையாக மாறியதும் அபய் பட்டீல் எம்.எல்.ஏ. உள்பட 30-க்கும் மேற்பட்டோர் அந்த வண்டியை வீதி, வீதியாக இழுத்து சென்றனர். மேலும் வீடுகளின் முன்பும் ஒரு பாத்திரத்தில் மாட்டு சாணம், கற்பூரம், வேப்பிலை, மூலிகை பொருட்களை போட்டு தீ வைக்கும்படி அவர் வேண்டுகோள் விடுத்தார்.அந்த வேண்டுகோளை ஏற்று 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது வீடுகளின் முன்பு அபய் பட்டீல் எம்.எல்.ஏ. கூறியது போல மாட்டு சாணம், கற்பூரம், வேப்பிலை, மூலிகை பொருட்களை பாத்திரத்தில் போட்டு தீ வைத்தனர். அதில் இருந்து வெளியேறிய புகையை வீடு முழுவதும் பரவ விட்டனர். இதுதொடர்பாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. அபய் பட்டீலின் இந்த முயற்சிக்கு பலர் பாராட்டு தெரிவித்த போதிலும், ஒரு சிலர் இது மூடநம்பிக்கை என்று கூறி

எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொகுதி மக்களை காப்பாற்ற...

மேலும் கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் போது அபய் பட்டீல் எம்.எல்.ஏ. ஊரடங்கை மீறி செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து அபய் பட்டீல் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது, நான் ஆயுர்வேத மருத்துவத்தை முழுமையாக நம்புகிறேன். இந்த அக்னி ஹோமத்தை நடத்துவதன் மூலம் எனது தொகுதி மக்களை கொரோனாவில் இருந்து காப்பாற்ற முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். என்னை பற்றி யார் குறை கூறினாலும் பரவாயில்லை.50 வீடுகளில் அக்னி ஹோம முறையை நடத்தி வைத்து உள்ளேன். அடுத்த மாதம் 15-ந் தேதிக்குள் எனது தொகுதி முழுவதும் இந்த அக்னி ஹோமத்தை நடத்த உள்ளேன். நான் ஊரடங்கை மீறவில்லை. என்னுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து இருந்தனர். சமூக இடைவெளியை

கடைப்பிடித்தனர். நாங்கள் எப்போது ஊரடங்கை மீறினோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

துணை முதல்-மந்திரி எதிர்ப்பு

அபய் பட்டீலின் இந்த முயற்சிக்கு பெலகாவி வடக்கு தாகுதி எம்.எல்.ஏ. அனில் பெனகே பாராட்டு தெரிவித்து உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனாவை ஒழிக்க அபய் பட்டீல் எம்.எல்.ஏ. எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது. அவர் ஆயுர்வேத முறையை பின்பற்றுகிறார். நானும் அந்த முறையை பின்பற்றி எனது தொகுதியில் உள்ள மக்களுக்கு தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆயுர்வேத மருந்தை வினியோகம் செய்ய உள்ளேன் என்று கூறினார்.ஆனால் அபய் பட்டீலின் இந்த முயற்சிக்கு துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனாவை ஒழிக்க அபய் பட்டீல் எம்.எல்.ஏ. மேற்கொண்ட முயற்சி மக்களிடையே தவறான கருத்தை கொண்டு சென்று விடும். ஊரடங்கு அமலில் இருக்கும் போது மக்கள் வெளியே வர கூடாது என்று உத்தரவிட்ட நிலையில், மக்கள் பிரதிநிதி ஊரடங்கை மீறி அக்னி ஹோமம் நடத்தியது சரியல்ல என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com