கர்நாடகா: பா.ஜ.க. எம்.பி. மறைவு; விடுமுறை அறிவித்த காங்கிரஸ் அரசு

முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான மறைந்த பிரசாத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
கர்நாடகா: பா.ஜ.க. எம்.பி. மறைவு; விடுமுறை அறிவித்த காங்கிரஸ் அரசு
Published on

மைசூரு,

கர்நாடகாவின் சாம்ராஜ்நகர் மக்களவை தொகுதியின் எம்.பி.யாக இருந்தவர் வி. ஸ்ரீனிவாஸ் பிரசாத் (வயது 77). வயது முதிர்வால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார்.

பா.ஜ.க.வை சேர்ந்த மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியான பிரசாத்தின் மறைவை அடுத்து, மைசூரு மற்றும் சாமராஜ்நகர் மாவட்டங்களில் இன்று ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது என கர்நாடக அரசு அறிவித்து உள்ளது.

இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறும்போது, எம்.பி. பிரசாத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் அரசு ஒரு நாள் விடுமுறையை அறிவிக்கிறது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கூறினார். மறைந்த எம்.பி.யின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதுடன், அவருடைய குடும்பத்தினருக்கு இரங்கல்களையும் தெரிவித்து கொண்டார்.

ஜனதா கட்சி மற்றும் காங்கிரசில் இருந்தபோது, சித்தராமையாவுடன் பிரசாத் ஒன்றாக பணியாற்றி உள்ளார். எனினும், சித்தராமையாவுடன் ஏற்பட்ட மோதல் போக்கால், 2018-ல் சட்டசபை தேர்தலுக்கு முன் காங்கிரசிலிருந்து விலகி, பா.ஜ.க.வில் பிரசாத் இணைந்து விட்டார்.

எனினும், இவர்கள் இருவரும் சமீபத்தில் மைசூரு நகரில் நேரில் சந்தித்து கொண்டனர். அப்போது, நடப்பு அரசியல் சூழல் பற்றி ஆலோசித்தனர். பிரசாத்தின் மறைவையொட்டி பிரதமர் மோடியும் நேற்று தன்னுடைய இரங்கல்களை அவருடைய குடும்பத்தினருக்கு தெரிவித்து கொண்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com