

பெங்களூரு: பசவகல்யாண், மஸ்கி, பெலகாவி மக்களவை தொகுதிகளுக்கு வருகிற 17-ந் தேதி நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிட 97 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
இடைத்தேர்தல்
கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள பசவகல்யாண், மஸ்கி, பெலகாவி மக்களவை ஆகிய தொகுதிகளுக்கு வருகிற 17-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 23-ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் மனு தாக்கல் நேற்று நிறைவடைந்தது.
இதில் பசவ கல்யாண் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் மாலா நாராயணா,பா.ஜனதா சார்பில் சரனு சலகார், ஜனதா தளம் (எஸ்) சார்பில் சையத் யஷரப்அலி ஆகியோரும், மஸ்கி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பசவனகவுடா துருவிகல், பா.ஜனதா சார்பில் பிரதாப்கவுடா பட்டீல் ஆகியோரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மஸ்கியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளரை நிறுத்தவில்லை.
போட்டியிடவில்லை
பெலகாவி மக்களவை தொகுதியில் பா.ஜனதா சார்பில் மங்கலா சுரேஷ் அங்கடி, காங்கிரஸ் சதீஸ் ஜார்கிகோளி ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த தொகுதியிலும் ஜனதா தளம் (எஸ்) போட்டியிடவில்லை. இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. அந்த 3 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 97 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (புதன்கிழமை) நடக்கிறது. மனுக்களை வாபஸ் பெற 2-ந் தேதி கடைசி நாள் ஆகும். அன்றைய தினம் மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
முன்னதாக பெலகாவி மக்களவை தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் அங்கடியின் மனைவி மங்கலா சுரேஷ் அங்கடி பெலகாவியில் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது முதல்-மந்திரி எடியூரப்பா உடன் இருந்தார்.