கர்நாடகா: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்வு-மந்திரிசபை கூட்டத்தில் முடிவு


கர்நாடகா: முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு உயர்வு-மந்திரிசபை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 20 Jun 2025 10:25 AM IST (Updated: 20 Jun 2025 10:25 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசின் வீட்டு வசதி திட்டத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 15 ஆக அதிகரித்து மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக மந்திரிசபை கூட்டம் நேற்று சிக்பள்ளாப்பூர் மாவட்டம் நந்திமலையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் கடைசி நேரத்தில் மந்திரிசபை கூட்டம் பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. இதற்கான காரணத்தை அரசு கூறவில்லை. இதனால் சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஏனெனில் இங்கு மந்திரிசபை கூட்டம் நடைபெற்று இருந்தால் தங்கள் பகுதிக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்து இருக்கும் என்று அவர்கள் எதிர்பார்த்தனர். அடுத்த மாதம் அங்கு மந்திரிசபை கூட்டம் நடைபெற வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையே அரசு அறிவித்தப்படி கர்நாடக மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார், போலீஸ் மந்திரி பரமேஸ்வர் உள்ளிட்ட மந்திரிகள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து சட்டத்துறை மந்திரி எச்.கே.பட்டீல் நிருபர்களிடம் கூறியதாவது:-

கா்நாடக கிராமப்புற, நகர்ப்புற வீட்டு வசதி திட்டங்களில் முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மையினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த இட ஒதுக்கீட்டு அளவை 15 சதவீதமாக அதிகரிக்க தீர்மானித்துள்ளோம். மத்திய அரசின் உத்தரவின்பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த மக்களின் சமூக நிலையை கண்டு இட ஒதுக்கீட்டை அதிகரித்துள்ளோம்" இவ்வாறு அவர் கூறினார்.

கர்நாடக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்டு 11-ந் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீட்டு வசதி திட்டங்களில் சிறுபான்மையினர் அதாவது அதிகம் பயன்பெறும் சமூகங்களில் முதன்மையாக உள்ள முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரித்து உள்ளதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வரும் நாட்களில் இதை கண்டித்து பா.ஜனதா போராட்டத்தை முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அரசு திட்ட பணி ஒப்பந்தங்களில் சிறுபான்மையினருக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் வழங்காமல், அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story