காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்

கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. #Allpartymeet #CauveryIssue
காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம்
Published on

பெங்களூரு,

தமிழகத்தில் டெல்டா பகுதிக்கு காவிரி நீர் கிடைப்பதற்கு ஆண்டுக்கணக்கில் தமிழக மக்களும், அரசியல் கட்சிகளும் போராடி வந்தன. தமிழக அரசின் சட்டப்போராட்டத்துக்கு வெற்றி கிடைத்தது. அதன்படி, தமிழக அரசு நீண்ட நாட்களாக கோரிவந்த காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நதிநீர் ஒழுங்காற்றுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டு அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காவிரி நதிநீர் மேலாண்மை வாரியத்தின் தலைவராக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசேன் நியமிக்கப்பட்டுள்ளார்.இதன் உறுப்பினர்களாக மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் நவீன் குமார், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை கமிஷனர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில மத்திய அரசு அதிகாரிகள் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடகாவின் நீர்வளத்துறை நிர்வாக செயலாளர் (பொறுப்பு), கேரள நீர்வளத்துறை செயலாளர் டிங்கு பிஸ்வால், புதுச்சேரி பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் மேம்பாட்டு கமிஷனர் அன்பரசு, தமிழக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் பகுதிநேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய நீர்வள ஆணையத்தின் தலைமைப் பொறியாளர் கோயல், காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆணையத்தின் தலைமையகம் டெல்லியில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தலைவர், உறுப்பினர்கள், பகுதி நேர உறுப்பினர்கள் 9 பேர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆணையத்தின் முதல் கூட்டம் வரும் ஜூலை 2-ந் தேதியன்று டெல்லியில் கூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் உறுப்பினர்களும், மத்திய அரசு பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள். இதில், பல்வேறு அம்சங்கள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளது.

கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டம்

இந்த நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ள நிலையில், இன்று கர்நாடகாவில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முதல் மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் பற்றி ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com