நில முறைகேடு வழக்கு: லோக்அயுக்தா போலீசார் முன்பு ஆஜரானார் சித்தராமையா


நில முறைகேடு வழக்கு: லோக்அயுக்தா போலீசார் முன்பு ஆஜரானார் சித்தராமையா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 6 Nov 2024 10:05 AM IST (Updated: 6 Nov 2024 10:41 AM IST)
t-max-icont-min-icon

லோக்அயுக்தா போலீசார் முன்பு கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா நேரில் ஆஜரானார்.

மைசூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா (வயது 76) தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்-மந்திரி சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு, மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (மூடா) 14 வீட்டுமனைகளை ஒதுக்கி இருந்தது. இதில், முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.முடா வீட்டு மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் அம்மாநில கவர்னரிடம் மனு அளித்தனர்.

இந்த விசாரணைக்குத் தடை கோரி கர்நாடக ஐகோர்ட்டில் சித்தராமையா வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், விசாரணைக்குத் தடை விதிக்க மறுத்த கர்நாடக ஐகோர்ட்டு, விசாரணையைத் தொடர்ந்து நடத்த அனுமதித்தது. இந்த வழக்கை லோக் அயுக்தா போலீஸ் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே முடா நிலமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக இன்று ( நவம்பர் 6ஆம் தேதி) விசாரணைக்கு நேரில் ஆஜராக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பியது.

இந்நிலையில் முதல்-மந்திரி சித்தராமையா இன்று மைசூரு லோக்அயுக்தா போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் நேரில் ஆஜராகி உள்ளார். இதற்காக அவர் இன்று காலை 7.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து சாலை மார்க்கமாக மைசூரு சென்றார். அவரிடம் விசாரணை நடத்த தேவையான முன்னேற்பாடுகளை போலீசார் செய்திருந்தனர். தற்போது ஆஜராகி உள்ள சித்தராமையாவிடம் 2 மணி நேரம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

சித்தராமையா விசாரணைக்கு ஆஜராவதால் லோக்அயுக்தா அலுவலகத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

1 More update

Next Story