கர்நாடக காங்கிரசுக்கு 15 நாட்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் - ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தகவல்

காநாடக காங்கிரசுக்கு 15 நாட்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.
கர்நாடக காங்கிரசுக்கு 15 நாட்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் - ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தகவல்
Published on

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிந்தனை முகாம் கூட்டம் பெங்களூருவில் திட்டமிட்டப்படி தொடங்கியது. 2 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா தொடங்கி வைத்து பேசியதாவது:-

இந்த சிந்தனை முகாம் நம்மை மேலும் கொள்கை சார்ந்து பலப்படுத்தி கொள்ள உதவும். அதன் அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி சரிவு, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சமூகநீதியை உறுதி செய்தல், கட்சியை பலப்படுத்துதல், விவசாயம் மற்றும் இளைஞர்கள், பெண்கள், கல்வி, வேலை வாய்ப்பு தொடர்பாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும்.

மாவட்ட மற்றும் வட்டார அளவிலான கட்சி பதவிகள் அடுத்து நிரப்பப்படும். கர்நாடக காங்கிரஸ் கட்சியின் மாநில அளவிலான பதவிகளுக்கு 15 நாட்களில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்படுவார்கள். கட்சியின் அனைத்து சார்பு அணிகளின் நிர்வாகிகள் நியமனமும் மேற்கொள்ளப்படும். வட்டார மற்றும் கிராம குழுக்களுடன் மண்டல குழுக்களும் இருக்க வேண்டும்.

அடுத்த 20 நாட்களில் மாநில அளவிலான 20 போர் அலுவலகம் திறக்கப்படும். தினசரி நடைபெறும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் தெரிவிக்கப்படும்.

கட்சியில் 50 சதவீத பதவிகள் 50 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படும். அப்போது தான் அனுபவம் வாய்ந்த தலைவர்களுடன் இளைஞர்களுக்கும் சம அளவில் வாய்ப்பு கிடைக்கும். இதே சூத்திரத்தை கட்சியின் அனைத்து சார்பு அணிகளிலும் பின்பற்ற வேண்டும். கட்சி பதவிகள் நியமனத்தில் அனைத்து சாதியினருக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.

150 தொகுதிகளில் வெற்றி கட்சிக்கு புதிதாக வருபவர்களுக்கு பதவி வழங்கும் நோக்கத்தில் ஒருவருக்கு வழங்கப்படும் பதவி 5 ஆண்டுகளுக்கு மட்டும் பொருந்தும். அதனால் மாவட்ட, வட்டார காங்கிரஸ் தலைவர்கள் 5 ஆண்டுகளை பூர்த்தி செய்திருந்தால் அந்த பதவியை வேறு ஒருவருக்கு விட்டுக்கொடுக்க வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

இவ்வாறு ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com