ஈசுவரப்பா பதவி விலக கோரி சட்டசபையை முடக்கும் காங்கிரஸ்; மந்திரிகளுடன் இன்று பசவராஜ் பொம்மை ஆலோசனை

தேசிய கொடியை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மந்திரி ஈசுவரப்பாவை பதவி விலக கோரி காங்கிரசார் சட்ட சபையை முடக்கி வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண பா.ஜனதா மந்திரிகள் மற்றும் தலைவர்களுடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று(திங்கட்கிழமை) அவசர ஆலோசனை நடத்துகிறார்.
ஈசுவரப்பா பதவி விலக கோரி சட்டசபையை முடக்கும் காங்கிரஸ்; மந்திரிகளுடன் இன்று பசவராஜ் பொம்மை ஆலோசனை
Published on

ஹிஜாப் விவகாரத்தில் கருத்து தெரிவித்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் ஒரு நாள் தேசிய கொடிக்கு பதில் காவி கொடி ஏற்றப்படும் என்று கூறினார்.

ஈசுவரப்பாவை நீக்க போராட்டம்

இந்த விவகாரத்தை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்துள்ளது. தேசிய கொடியை அவமதித்த ஈசுவரப்பாவை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரி காங்கிரஸ் உறுப்பினர்கள், கர்நாடக சட்டசபைக்குள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு விதானசவுதாவில் இரவு, பகலாக நடந்து வரும் இந்த போராட்டம், நேற்றுடன் 4 நாட்கள் ஆகிறது. மேலும் கடந்த 17 மற்றும் 18-ந் தேதிகளில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்த விடாமல் சபை முழுவதையும் காங்கிரஸ் உறுப்பினர்கள் முடக்கினார்கள். இதனால் சட்டசபையும், மேல்-சபையும் எந்த விவாதமும் நடைபெறாமல் முடக்கப்பட்டுள்ளது. மந்திரி பதவியில் இருந்து ஈசுவரப்பாவை நீக்கும் வரை போராட்டம் தொடரும் என காங்கிரஸ் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

பா.ஜனதா மேலிடம் உத்தரவு

இந்த விவகாரத்தில் ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக இருக்க மந்திரிகளும், பா.ஜனதா தலைவர்களும் முடிவு செய்திருந்தனர். அதாவது காங்கிரஸ் கொடுக்கும் அழுத்தத்திற்கு அடி பணியக்கூடாது என்றும், மந்திரி பதவியில் இருந்து ஈசுவரப்பாவை நீக்க கூடாது என்றும் தீர்மானித்திருந்தனர். அதே நேரத்தில் மந்திரி ஈசுவரப்பா தேசிய கொடியை அவமதித்த விவகாரத்தை தேசிய அளவில் கொண்டு சென்று, பா.ஜனதாவுக்கு நெருக்கடி கொடுக்க காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து, காங்கிரஸ் நடத்தி வரும் உள்ளிருப்பு போராட்டத்திற்கு ராகுல்காந்தி உள்ளிட்ட மேலிட தலைவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரத்தை பா.ஜனதா மேலிடமும் தீவிரமாக எடுத்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து, இந்த விவகாரத்திற்கு உரிய தீர்வு காணவும், பிரச்சினையை கூடிய விரைவில் முடித்து கொள்ளும்படியும் கர்நாடக பா.ஜனதா தலைவர்களுக்கு, பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

இன்று தலைவர்கள் ஆலோசனை

குறிப்பாக மந்திரி ஈசுவரப்பா தேசிய கொடியை அவமதித்ததாக கூறும் விவகாரத்தில் பா.ஜனதாவுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதால், இந்த விவகாரத்தை கைமீறி செல்ல விடாமல் தடுக்கவும், அதற்கு முன்பாக உரிய முடிவு எடுக்கும்படியும் பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள பா.ஜனதா கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு பா.ஜனதா தலைவர்களின் அவரச ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.

இந்த கூட்டம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மூத்த மந்திரிகளான ஈசுவரப்பா, அசோக், மாதுசாமி, முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர...

இந்த கூட்டத்தில் சட்டசபையை முடக்கியும், மாநிலம் முழுவதும் ஈசுவரப்பாவுக்கு எதிராக போராட்டம் நடத்தும் காங்கிரஸ் கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக தெரிகிறது. இந்த பிரச்சினைக்கு இன்றே தீர்வு காண என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மற்ற தலைவர்களுடன் ஆலோசித்து உரிய முடிவு எடுக்க உள்ளார்.

ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக இருப்பதா? நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.

ஹிஜாப் விவகாரம்

அதே நேரத்தில் ஹிஜாப் விவகாரமும் மாநிலத்தில் பெரிய அளவில் சென்று கொண்டு இருக்கிறது. இதுபற்றியும் இன்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. ஏனெனில் கர்நாடக ஐகோர்ட்டு ஹிஜாப் விவகாரத்தில் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு இருந்தாலும், பள்ளி, கல்லூரிகளில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் பள்ளி, கல்லூரிகளில் இறுதி தேர்வு தொடங்கப்பட இருக்கிறது.

அதற்குள் ஹிஜாப் விவகாரத்திற்கும் விரைவில் தீர்வு காணும்படி பா.ஜனதா மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹிஜாப் விவகாரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்து பள்ளி, கல்லூரிகளில் நிலவும் அசாதாரண நிலைக்கு உரிய தீர்வு காண்பது குறித்து கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட இருக்கிறது. குறிப்பாக ஹிஜாப் மற்றும் ஈசுவரப்பா விவகாரத்தில் முக்கிய தலைவர்களை தவிர மற்ற யாரும் தேவையில்லாமல் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் பா.ஜனதா மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com