

ஈசுவரப்பா ராஜினாமா
கர்நாடகத்தில் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியாக இருந்தவர் ஈசுவரப்பா. இவர், காண்டிராக்டர் சந்தோஷ் பட்டீலிடம் 40 சதவீதம் கமிஷன் கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், கடந்த 12-ந்தேதி சந்தோஷ் பட்டீல் தற்கொலை செய்துகொண்டார். மேலும் தனது சாவுக்கு ஈசுவரப்பா தான் காரணம் என வாட்ஸ்-அப்பில் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக ஈசுவரப்பா மீது உடுப்பி டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவரை மந்திரி பதவியில் இருந்து விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ்பொம்மையை சந்தித்து மந்திரி பதவி ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை ஈசுவரப்பா வழங்கினார்.
கவர்னர் அங்கீகரிப்பு
அந்த ராஜினாமா கடிதத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, உடனடியாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு அனுப்பி வைத்தார். இந்த நிலையில், ஈசுவரப்பாவின் மந்திரி பதவி ராஜினாமாவை கவர்னர் தாவர்சந்த் கெலாட் அங்கீகரித்துள்ளார். இதுதொடர்பாக கவர்னர் தாவர்சந்த் கெலாட் வெளியிட்டுள்ள அறிக்கயைல் கூறி இருப்பதாவது:-
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பதவியை ஈசுவரப்பா ராஜினாமா செய்திருப்பதற்கான கடிதத்தை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அந்த ராஜினாமாவை நான் அங்கீகரித்துள்ளேன். இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.