“தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை” - டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மகன்

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட தந்தை இறந்ததால், கொரோனா வார்டுக்குள் புகுந்து பெண் டாக்டர் மீது அவரது மகன் தாக்குதல் நடத்தினார்.
“தந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை” - டாக்டர் மீது தாக்குதல் நடத்திய மகன்
Published on

பெல்லாரி,

பெல்லாரி டவுனை சேர்ந்தவர் 65 வயது முதியவர். இவருக்கு கடந்த 2 வாரத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது. இதனால் அவர் பல்லாரி டவுனில் உள்ள விம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் அந்த முதியவர் இறந்து விட்டார். அவரது உடலை சுகாதாரத்துறையினர் எடுத்து சென்று அடக்கம் செய்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா வார்டில் டாக்டரான பிரியதர்ஷினி என்பவர் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது அந்த கொரோனா வார்டுக்குள் புகுந்த முதியவரின் மகனான திப்பேசாமி (வயது 35) என்பவர், டாக்டர் பிரியதர்ஷினியிடம் எனது தந்தைக்கு நீங்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் அவர் இறந்து விட்டார் என்று கூறி வாக்குவாதம் செய்தார். அவரை பிரியதர்ஷினி சமாதானம் செய்ய முயன்றார். அப்போது ஆத்திரம் அடைந்த திப்பேசாமி, பிரியதர்ஷினியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

இந்த நிலையில் பிரியதர்ஷினியை, திப்பேசாமி தாக்கும் காட்சிகள் கொரோனா வார்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. மேலும் டாக்டரை தாக்கிய திப்பேசாமியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன.

மேலும் தன்னை திப்பேசாமி தாக்கியது குறித்து கவுல் பஜார் போலீஸ் நிலையத்தில் பிரியதர்ஷினியும் புகார் அளித்து இருந்தார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திப்பேசாமியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஜனார்த்தன் நிருபர்களிடம் கூறும்போது, கொரோனாவுக்கு உயிரிழப்பவர்களின் உறவினாகள் தங்களது உணர்ச்சியை கட்டுப்படுத்தி கொள்ள வேண்டும். மருத்துவர்கள், செவிலியர்கள் தங்களது உயிரை பொருட்படுத்தாமல் கொரோனாவை தடுக்க முன்களத்தில் நின்று பணியாற்றி வருகின்றனர். பல்லாரி அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர் பிரியதர்ஷினி மீது நடந்த தாக்குதல் கண்டிக்கத்தக்கது. சட்டத்தை யாரும் கையில் எடுக்க கூடாது என்றார்.

டாக்டர் பிரியதர்ஷினி மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உள்ள இந்திய மருத்துவ கழகத்தின் இயக்குனர் டாக்டர் சீனிவாசா, பிரியதர்ஷினியை தாக்கியவர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com