கர்நாடகா: மனைவியை கொலை செய்து விட்டு மாரடைப்பால் மரணம் என நாடகம்; ஆட்டோ டிரைவர் கைது

இதுகுறித்து மஞ்சுநாத்திடம் கேட்டபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார்.
கர்நாடகா:  மனைவியை கொலை செய்து விட்டு மாரடைப்பால் மரணம் என நாடகம்; ஆட்டோ டிரைவர் கைது
Published on

கார்வார்

கார்வார் அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்து மாரடைப்பால் இறந்துவிட்டதாக நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே உள்ள மாங்கி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாத் (வயது 32). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி மங்களா (வயது 27) என்ற மனைவியும், 3 வயதில் ஒரு மகளும் உண்டு. மஞ்சுநாத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து மங்களாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மேலும், தனது குழந்தையையும் தூங்க விடாமல் துன்புறுத்தி வந்துள்ளார். இந்தநிலையில் மஞ்சுநாத் நேற்று முன்தினம் இரவு அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது மனைவி மங்களா தூங்கிக்கொண்டு இருந்துள்ளார். இதனை பார்த்த மஞ்சுநாத் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

கைகலப்பு

மேலும், அவர்களது தகராறு முற்றவே, கைகலப்பாக மாறியுள்ளது. பின்னர் மஞ்சுநாத் தனது மனைவியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் மது போதையில் இருந்த மஞ்சுநாத், மங்களாவின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். அப்போது மங்களா மூச்சுவிட முடியாமல் திணறியுள்ளார். ஆனாலும் விடாமல் மஞ்சுநாத் கழுத்தை நெரித்ததில், மங்களா சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.

இதனை பார்த்த மஞ்சுநாத் உடனடியாக மங்களாவின், பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகள் மாரடைப்பால் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மஞ்சுநாத்தின் வீட்டுக்கு வந்தனர். அப்போது மங்களாவின் உடலை பார்த்து அவரது தங்கை கதறி அழுதுள்ளார். இதில் மங்களாவின் உடலில் காயங்கள் இருப்பதை பார்த்த அவரது தங்கை சந்தேகமடைந்தார். இதுகுறித்து மஞ்சுநாத்திடம் கேட்டபோது, அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார்.

கணவர் கைது

பின்னர் இதுகுறித்து உடனடியாக மங்களாவின் குடும்பத்தினர் மாங்கி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மங்களாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கார்வார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சந்தேகத்தின் பேரில் மஞ்சுநாத்தை பிடித்து விசாரித்தனர். இதில் மனைவியை கொலை செய்து மாரடைப்பு நாடகமாடியது தெரியவந்தது. பின்னர் மஞ்சுநாத் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com