

கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையால் பாதிப்பு நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது.
கொரோனா கட்டுப்பாடுகள்
தினசரி பாதிப்பு சராசரியாக 45 ஆயிரத்தை கடந்து பதிவாகி வந்தது. பலியும் படிப்படியாக அதிகரித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்தது. அதாவது வார இறுதி நாட்கள் மற்றும் இரவு நேர ஊரடங்கை அரசு அமல்படுத்தி இருந்தது.
மேலும் 10 மற்றும் பி.யூ.சி. முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு வகுப்புகளை தவிர்த்து அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. அத்துடன் ஓட்டல்கள், தியேட்டர்கள், மதுபான விடுதிகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
கடும் எதிர்ப்பு
இதுதவிர கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளையும் அரசு அமல்படுத்தி இருந்தது. ஆனால் வார இறுதி நாட்கள் ஊரடங்குக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.
இதையடுத்து, கடந்த வாரம் வார இறுதி நாட்கள் ஊரடங்கை ரத்து செய்து அரசு உத்தரவிட்டு இருந்தது. அதே நேரத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருந்தாலும் ஆஸ்பத்திரிகளில் சேரும் நபர்களின் எண்ணிக்கையும், கொரோனாவுக்கு பலியாகும் நபர்களின் எண்ணிக்கையும் குறைவாக இருப்பதால், கொரோனா கட்டுப்பாடுகளில் இன்னும் தளர்வுகளை செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அரசை வலியுறுத்தி வந்தனர்.
பசவராஜ் பொம்மை ஆலோசனை
இந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்வது குறித்து பெங்களூருவில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நேற்று மதியம் நடைபெற்றது. இதில், அரசால் அமைக்கப்பட்ட நிபுணர்கள் குழுவினர், மந்திரிகளான ஆர்.அசோக், சுதாகர், பி.சி.நாகேஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரசு உயர் அதிகாரிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று இருந்தனர்.
இதில், மாநிலத்தில் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருவதாலும், குணமடையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகளை செய்ய நிபுணர்கள் குழுவினர் அரசுக்கு பரிந்துரை செய்தார்கள். இதையடுத்து, இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்வது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நிருபர்களிடம் கூறியதாவது:-
இரவுநேர ஊரடங்கு ரத்து
மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி குணமடையும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை கர்நாடகத்தில் குறைந்திருக்கிறது. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக வரும் நபர்களின் எண்ணிக்கை 2 சதவீதமாக குறைந்திருக்கிறது. இதுபோன்ற காரணங்களால் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் செய்ய நிபுணர்கள் குழுவினர் பரிந்துரை செய்திருந்தனர்.
அதன்படி, வருகிற 31-ந் தேதி (அதாவது நாளை) இரவு முதல், இரவுநேர ஊரடங்கை ரத்து செய்து மக்களுக்கு நல்ல செய்தியை அரசு கொடுத்துள்ளது. பெங்களூருவில் மூடப்பட்டுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை 31-ந் தேதியில் இருந்து திறக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரெயில் மற்றும் அரசு பஸ்களில் 100 சதவீத இருக்கைகளிலும் பயணிகள் பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு
ஓட்டல்கள், பப்கள், ரெஸ்டாரண்ட்டுகள், மதுபான விடுதிகள், கிளப்புகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அந்த கட்டுப்பாடுகளும் ரத்து செய்யப்படுகிறது.
ஓட்டல்களில் 100 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு அலுவலகங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்டு இருந்த உத்தரவும் ரத்து செய்யப்படுகிறது.
சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள், பிற அரங்குகளில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள விதிமுறைகள் தொடரும். திருமண நிகழ்ச்சிகள் திறந்த பகுதிகளில் நடந்தால் 300 பேரும், திருமண மண்டபங்களில் நடந்தால் 200 பேரும் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
போராட்டங்களுக்கு தடை
கர்நாடகத்தில் கோவில்கள், மசூதி உள்பட வழிபாட்டு தலங்களுக்கு பக்தர்கள் செல்லவும், அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கலந்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுகிறது.
அதே வேளையில் பொதுக்கூட்டங்கள், அரசியல் பொதுக்கூட்டம், போராட்டம், ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்களுக்கான விதிமுறைகள் ஏற்கனவே இருந்ததே அமலில் இருக்கும். அதாவது நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்களில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
முகக்கவசம் கட்டாயம்
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக கேரளா, மராட்டிய மாநில எல்லை பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த, சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக 25 சதவீத படுக்கைகளை ஒதுக்கவும், அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தவிர மற்ற நோய்களால் பாதிக்கப்படும் நபர்களுக்கும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உரிய படுக்கைகள் ஒதுக்கி சிகிச்சை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு இருக்கிறது. கொரோனா விதிமுறைகளில் அரசு தளர்வுகள் செய்திருந்தாலும், மக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயமாகும். கொரோனா விதிமுறைகளை ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று இரவு ஊரடங்கு
கர்நாடகத்தில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்டு இருந்த பல்வேறு கட்டுப்பாடுகளில் அரசு தளர்வுகளை செய்து அறிவித்துள்ளது. அதன்படி, பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும்.
நாளை (திங்கட்கிழமை) முதல் இரவு நேர ஊரடங்கு கிடையாது. ஓட்டல்களில் எப்போதும் போல் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிடலாம். அரசின் இந்த உத்தரவுக்கு வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.