கர்நாடகா: ரசாயன ஆலையில் வாயு கசிவு; மூச்சு திணறி 2 பேர் பலி

கர்நாடகாவில் ரசாயன ஆலையில் வாயு கசிவு ஏற்பட்டதில் பலியான ஒருவர் கேரளாவை சேர்ந்த பிஜில் பிரசாத் (வயது 33) என தெரிய வந்துள்ளது.
மங்களூரு,
கர்நாடகாவின் மங்களூரு நகரில் பெட்ரோகெமிக்கல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் மேல்தொட்டி ஒன்றின் நடைமேடை பகுதியில் மூத்த பணியாளர்கள் 2 பேர் சுயநினைவற்ற நிலையில் கிடந்துள்ளனர்.
இதனை அடுத்து, தகவல் அறிந்து அவர்கள் 2 பேரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்கள் உயிரிழந்து விட்டனர். இதுபற்றி நடந்த முதல்கட்ட விசாரணையில், ஹைட்ரஜன் சல்பைடு வாயு கசிவு ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
வழக்கம்போல் பணியின் ஒரு பகுதியாக அவர்கள் சோதனை செய்தபோது, அதனை சுவாசித்துள்ளனர். அப்போது அவர்கள் முக கவசமும் அணிந்துள்ளனர் என கூறப்படுகிறது. எனினும், வாயு கசிவால் மூச்சு திணறி அவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில், அவர்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களில் ஒருவர், பிரயாக்ராஜ் நகரை சேர்ந்த தீப சந்திரா (வயது 33) என்றும் மற்றொரு நபர் கேரளாவை சேர்ந்த பிஜில் பிரசாத் (வயது 33) என்பதும் தெரிய வந்துள்ளது.
அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் வாக்குமூலம் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படும் என மங்களூரு காவல் ஆணையாளர் சுதீர் குமார் ரெட்டி கூறியுள்ளார்.






