தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகாவே ‘கேட்வே’ அமித்ஷா சொல்கிறார்

தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகாவே நுழைவு வாயிலாக அமையும் என பா.ஜனதா தலைவர் அமித்ஷா கூறிஉள்ளார். #AmitShah #BJP
தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகாவே ‘கேட்வே’ அமித்ஷா சொல்கிறார்
Published on

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தில் மே மாதம் 12-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் தீவிரமாக இறங்கி உள்ளன. பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா, கட்சியின் நிர்வாகிகள் மத்தியில் பேசுகையில், தென் இந்தியாவில் தாமரை மலர் கர்நாடகாவே நுழைவு வாயிலாக அமையும் என்றார். இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் பாரதீய ஜனதா வெற்றிக்கொடியை நாட்டினாலும், தென் இந்தியா நழுவிக்கொண்டே இருக்கிறது. கர்நாடகாவில் அடுத்த மாதம் பா.ஜனதா மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்வதன் மூலம் தென் இந்தியாவில் பா.ஜனதா தன்னுடைய கனவை நிறைவேற்ற முடியும், என்று கூறிஉள்ளார் அமித்ஷா.

பாரதீய ஜனதா கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தன்வசப்படுத்த வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. மாநிலத்தில் ஊழல் காங்கிரஸ் அரசை வெளியேற்ற வாக்காளர்களும் ஆர்வமாக உள்ளார்கள். பாரதீய ஜனதாவை வழிநடத்தும் எடியூரப்பா மாநிலத்தின் முதல்-மந்திரியாக முடியும். பாரதீய ஜனதாவின் வெற்றியை உறுதிசெய்ய நீங்களும் தீவிரமாக பணியாற்ற வேண்டும். இப்போது பாரதீய ஜனதா காற்று அடிக்கிறது, அதனை நீங்கள் சுனாமியாக ஆக்க முடியும், என்று நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா பேசினார்.

கர்நாடக காங்கிரஸ் அரசை ஊழல் அரசு என விமர்சனம் செய்த அமித்ஷா, பெங்களூரு குற்ற நகராகிவிட்டது, காங்கிரஸ் அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கையால் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலையில் உள்ளது. இதுமட்டும்தான் காங்கிரஸ் அரசின் சாதனைகளாகும், வேறு எதுவும் கிடையாது. மத்தியில் உள்ள மோடி அரசு கர்நாடகாவிற்கு அதிக அளவு நிதியை ஒதுக்கீடு செய்கிறது. ஆனால் கர்நாடக காங்கிரஸ் அரசு அதனை பயன்படுத்துவது கிடையாது, குறிப்பாக விவசாயிகள் விஷயத்தில் என பேசிஉள்ளார் அமித் ஷா.

பாரதீய ஜனதா போன்ற கட்சிகளுக்கு வாக்குச்சாவடி நிலையிலான கண்காணிப்பாளர்களின் பணியானது முக்கியமானது எனவும் குறிப்பிட்டு உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com