

பெங்களூரு,
கர்நாடகத்தில் தலைநகர் பெங்களூரு உள்பட அனைத்து மாவட்டங்களிலும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகன ஓட்டிகளும், அவர்களது பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்றும், கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் என்றும் போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி பல்வேறு போக்குவரத்து விதிகளும் விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் பி.எம்.டி.சி.(பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம்), கே.எஸ்.ஆர்.டி.சி.(கர்நாடக அரசு போக்குவரத்து கழகம்) உள்ளிட்ட அரசு பஸ்களில் டிரைவர்கள் சீட் பெல்ட் அணியாமல் பஸ்களை ஓட்டுவதாக புகார்கள் எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஏ.ஐ.(செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப கேமராக்கள் படம் பிடித்து போலீசாருக்கு அனுப்பி வைத்த வண்ணம் உள்ளன. சமீபத்தில் விதானசவுதா முன்பு இதுபோல் சீட் பெல்ட் அணியாமல் பி.எம்.டி.சி. பஸ்சை ஓட்டிச் சென்ற டிரைவருக்கு ஏ.ஐ. கேமரா மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின் அடிப்படையில் போலீசார் ரூ.500 அபராதம் விதித்தனர்.
மேலும் விதானசவுதா சாலையோரம் நின்றிருந்த ஒரு பஸ்சின் டிரைவருக்கும், ஹெண்ணூர் பகுதியில் சென்று கொண்டிருந்த பஸ்சின் டிரைவருக்கும் தலா ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இது அரசு பஸ் டிரைவர்களிடையே பேசுபொருளானது. இந்த நிலையில் அரசு பஸ் டிரைவர்கள் அனைவரும் கண்டிப்பாக சீட் பெல்ட் அணிந்தபடி தான் பஸ்களை ஓட்ட வேண்டும் என்றும் கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும் சீட் பெல்ட்டுகளை சீரமைத்து கொடுக்கவும், டிரைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் போக்குவரத்து கழகங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறது.