வாக்கு திருட்டு புகார்; சிறப்பு புலனாய்வு குழு அமைத்த கர்நாடக அரசு

குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.
பெங்களூரு,
2023ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலின்போது வாக்கு திருட்டு நடைபெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், பீகாரில் நடைபெற்ற சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தப்பணியின்போது 60 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இதன் மூலம் தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜக வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டிற்கு தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே, கர்நாடகாவின் ஆலந்த் தொகுதியில் 2023 சட்டசபை தேர்தலின்போது 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக கர்நாடக சிஐடி (குற்ற புலனாய்வு துறை) விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை தொடர்பாக குறிப்பிட்ட சில தரவுகளை அளிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு கடந்த 18 மாதங்களில் 18 முறை சிஐடி கடிதம் அனுப்பியது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தேர்தலின்போது மாநிலம் முழுவதும் பதிவான அனைத்து வாக்கு திருட்டு புகார் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை கர்நாடக அரசு அமைத்துள்ளது. ஆலந்த் தொகுதியில் நடைபெர்ற வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் குற்ற புலனாய்வு துறை ஏடிஜிபி கே.பி.சிங் இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு தலைமை தாங்குவார் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. இந்த குழு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எழுந்த வாக்கு திருட்டு, வாக்காளர் பட்டியல் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்து மாநில அரசுக்கு அறிக்கையாக தாக்கல் செய்ய உள்ளது.






