

காங்கிரஸ் பாதயாத்திரை
காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் சார்பில் நடந்த பாதயாத்திரை போராட்டம் கடந்த 14-ந் தேதியுடன் நிறைவு பெற்றது. கொரோனா பரவல் காரணமாகவும், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு காரணமாகவும் பாதயாத்திரை நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், பாதயாத்திரையை திட்டமிட்டு அரசு நிறுத்திவிட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர். பாதயாத்திரையை தடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்ததாக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் குற்றச்சாட்டு கூறினார். இதுகுறித்து போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-
சதி செய்யவில்லை
கொரோனா பரவல் காரணமாக பாதயாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்களிடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அரசின் உத்தரவை மீறி காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பாதயாத்திரை நடத்தினார்கள். அரசியல் லாபத்திற்காக மக்களை பற்றிய எந்த ஒரு சிந்தனையும் இல்லாமல் பாதயாத்திரையை காங்கிரஸ் தலைவர்கள் நடத்தினர். ஆனால் காங்கிரசுக்கு லாபத்தை விட நஷ்டமே ஏற்பட்டுள்ளது.
மக்களின் நலனை கருத்தில் கொண்டும், கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்திலும் பாதயாத்திரை செல்ல வேண்டாம் என்று கூறினோம். பாதயாத்திரையை தடுத்து நிறுத்த அரசு எந்த விதமான சதியும் செய்யவில்லை. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையீடு காரணமாக பாதயாத்திரையை காங்கிரஸ் தலைவர்கள் நிறுத்தி உள்ளனர். இதில், அரசின் சதி எதுவும் இல்லை. ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கொரோனா விதிமுறைகளை மீறி இருப்பதற்காக, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் அனைவருக்கும் சமமானது.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.