கொரோனா பரவல்: 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு அறிவிப்பு

கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழு கூட்டம் நடைபெற்றது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

பெங்களூரு,

கேரளாவில் கொரோனா துணை மாறுபாடு JN.1 பாதிப்புகள் அதிகரித்து வரும் அச்சத்திற்கு மத்தியில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணைநோய் உள்ளவர்கள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை மந்திரி தினேஷ் குண்டுராவ் குடகு மாவட்டம் மடிக்கேரியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், "கர்நாடகத்தில் புதிய வகை கொரோனா பரவுவதை தடுக்கும் நோக்கத்தில் தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் கூட்டத்தை நடத்தியுள்ளேன். இதில் கொரோனாவை தடுக்க எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து விவாதித்தோம். சில ஆலோசனைகளை அந்த குழு வழங்கியுள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இணை நோய்கள் உள்ளவர்கள், சளி, காய்ச்சல் உள்ளவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். இதுகுறித்த வழிகாட்டுதல் இன்றே (நேற்று) பிறப்பிக்கப்படும்.

மாநிலம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் சுகாதார நிலையங்களில் கொரோனா பரவலை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம். கேரளாவின் எல்லை மாவட்டங்களான குடகு, மங்களூரு, சாம்ராஜ்நகர் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தியுள்ளேன். கேரளாவில் இருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளேன்.

மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு உள்ளவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அப்போது தான் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா? என்பது தெரியவரும். அதன் பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். கேரளாவை ஒட்டியுள்ள எல்லை மாவட்டங்களில் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்படும்" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com