

பெங்களூரு,
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி தினசரி பாதிப்பு 30 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் தலைநகர் பெங்களூருவில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலேயே பெருநகரங்களில் பெங்களூரு தான் வைரஸ் பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டிவிட்டது.
இதனைத்தொடர்ந்து கர்நாடகாவில் நாளை (ஏப்ரல் 27ஆம் தேதி) இரவு முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், கர்நாடகாவில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கர்நாடகாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த முழு ஊரடங்கு நாட்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதிக்கப்படும் என்றும், காலை 10 மணிக்கு பிறகு கட்டுமான, உற்பத்தி மற்றும் வேளாண் துறைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும், பொது போக்குவரத்து மூடப்படும் என்றும் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.