

பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் கொரோனா சிகிச்சைக்கு பயன்பத்தப்படும் ரெம்டெசிவர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்நிலையில் கர்நாடக பா.ஜ.க. தலைமை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் ரெம்டெசிவர் மருந்து தேவையான அளவுக்கு இருப்பு உள்ளது. அதனால் இந்த மருந்து பற்றாக்குறை இருப்பதாக வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை கர்நாடகத்திற்கு 47 ஆயிரத்து 726 குப்பி ரெம்டெசிவர் மருந்துகள் வந்துள்ளன. இது மட்டுமின்றி ஏற்கனவே 26 ஆயிரத்து 873 குப்பி மருந்துகள் இருப்பு உள்ளன. மேலும் 70 ஆயிரம் குப்பி ரெம்டெசிவர் மருந்துகளை வாங்க கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனாவுக்கு எதிராக பா.ஜனதா அரசு தீவிரமான முறையில் செயல்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் உள்ள 7 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் மூலம் தினமும் 812 டன் ஆக்சிஜன் தயாரிக்கப்படுகிறது. கடந்த 18-ந் தேதி முதல் இதுவரை 305 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் 19 ஆயிரத்து 417 மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளன. அதனால் பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு பா.ஜனதா தெரிவித்துள்ளது.