'சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை' என்ற உத்தரவை வாபஸ் பெற்ற ஐகோர்ட்டு

கடும் எதிர்ப்பை தொடர்ந்து, சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை என்ற உத்தரவை கர்நாடக ஐகோர்ட்டு வாபஸ் பெற்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

பெங்களூரு,

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கோட்டையை சேர்ந்தவர் இனாயத் உல்லா. இவர், கடந்த 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி மதியம் 3.30 மணியில் இருந்து மாலை 4.40 மணி வரை தனது செல்போனில் இணையதளத்தில் சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்த்து இருந்தார். இதுதொடர்பாக அதே ஆண்டு மே மாதம் 3-ந்தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் இனாயத் உல்லா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.

தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய கோரி கர்நாடக ஐகோர்ட்டில் இனாயத் உல்லா மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, 'சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை, அதுபோன்ற வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றம் செய்வது, மற்றவர்களுக்கு பகிர்வது தான் குற்றம்' என்று கூறி இனாயத் உல்லா மீது பதிவான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

ஐகோர்ட்டின் இந்த உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மேலும் ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை நீதிபதி நாகபிரசன்னா முன்னிலையில் நடைபெற்றது. அப்போது சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது குற்றம் இல்லை என்று ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு வாபஸ் பெறப்படுவதாக நீதிபதி நாகபிரசன்னா தெரிவித்தார். மேலும் இனாயத் உல்லா மீது பதிவான வழக்கை ரத்து செய்ய மறுத்து அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும் நீதிபதி கூறுகையில், 'நீதிபதிகளும் மனிதர்களாக தான் உள்ளனர். நாங்கள் செய்தது தவறு என்று தெரியவந்துள்ளது. அந்த தவறை முன்னெடுத்து செல்வது சரியில்லை. 67பி (பி) விதியின்படி சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பது, பதிவேற்றம் செய்வது, மற்றவர்களுக்கு பகிர்வது குற்றமாகும்' என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com