கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளை சிறையில் அடைப்போம் - கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை

கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளை சிறையில் அடைப்போம் என்று ஐகோர்ட்டு கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் அரசு அதிகாரிகளை சிறையில் அடைப்போம் - கர்நாடக ஐகோர்ட்டு எச்சரிக்கை
Published on

கோர்ட்டு அவமதிப்பு

கர்நாடக அரசின் வருவாய்த்துறையில் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலில் கோர்ட்டு தடையை மீறி நில ஆவணங்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது கர்நாடக ஐகோர்ட்டில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், தாசில்தார் செயலை நியாயப்படுத்த முயன்றார். இதனால் கோபம் அடைந்த தலைமை நீதிபதி, "ஐகோர்ட்டு தடை உத்தரவு அமலில் இருந்தபோதும், நில ஆவணங்களை திருத்தியது ஏன், இது கோர்ட்டு உத்தரவை மீறிய செயல்" என்று கூறி கண்டித்தார். அரசு அதிகாரிகள் கோர்ட்டு உத்தரவை மதிக்காத தன்மை கர்நாடகத்தில் நடக்கிறது. கோர்ட்டு மீது அதிகாரிகளுக்கு சிறிதளவு கூட மரியாதை இல்லை. கோர்ட்டின் கண்ணியம் என்ன, அதன் உத்தரவின் மதிப்பு என்ன, அதிகாரிகளின் கடமை என்ன, கோர்ட்டு அவமதிப்பு என்றால் என்ன, ஐகோர்ட்டின் அதிகாரம் என்ன என்பது குறித்து அதிகாரிகளை அடைத்தால் தள்ளி அவர்களுக்கு ஞானோதயம் ஏற்படுத்த வேண்டியது வரும்" என்று கூறி கடும் எச்சரிக்கை விடுத்தார்.

அவகாசம் தாருங்கள்

மேலும் அப்போது அங்கு இருந்த போலீசாரை அழைத்த தலைமை நீதிபதி, தாசில்தாரை சிறையில் தள்ளுங்கள் என்றார். உடனே அங்கு இருந்த தாசில்தார், தனது செயலுக்காக மன்னிப்பு கோருவதாக கூறினார். நடந்த தவறுகளை 24 மணி நேரத்தில் சரிசெய்வதாக அவர் உறுதியளித்தார். இதற்கு அவகாசம் தாருங்கள் என்று கேட்டு கொண்டார்.

  அதைத்தொடர்ந்து பேசிய தலைமை நீதிபதி, "இந்த வழக்கின் விசாரணையை 13-ந் தேதிக்கு ஒத்திவைக்கிறோம். அன்றைய தினம் தாசில்தார் நேரில் ஆஜராக வேண்டும். தாசில்தாரின் நடவடிக்கை திருப்தி அளிக்காவிட்டால் அவர் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com