விடுதி உரிமையாளரை கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொன்ற கல்லூரி மாணவர்கள்

கர்நாடக மாநிலம் பெங்களூருவின் கஸ்தூரி நகரில் தங்கும் விடுதி (பிஜி) இயங்கி வருகிறது.
ராகேஷ் -  டான் பிரைட்சன்
Published on

பெங்களூரு,

கர்நாடகாவில் விடுதி உரிமையாளரை அடித்துக்கொன்ற கல்லூரி மாணவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தங்கும் விடுதி

கர்நாடக மாநிலம், பெங்களூருவின் கஸ்தூரி நகர் பிரதான சாலைக்கு அருகில் தங்கும் விடுதி (பிஜி) இயங்கி வருகிறது. இந்த தங்கும் விடுதியை மாதவ் மாட்லே (வயது 37) என்பவர் நடத்தி வந்தார். மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என பலர் இந்த விடுதியில் தங்கியுள்ளனர்.

வாக்குவாதம்

இந்நிலையில், மாதவ் மாட்லே நேற்று மாலை 6 மணியளவில் விடுதி அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு மதுபோதையில் வந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் விடுதியில் உள்ள குடிநீர் குழாயைத் திறந்து சகதியாக இருந்த தங்கள் கால்களை கழுவினர்.

அப்போது, விடுதியில் சேராத 2 மாணவர்களும் மதுபோதையில் விடுதிக்குள் நுழைந்து குடிநீரை வீணக்குவது குறித்து மாணவர்களிடம் மாதவ் மாட்லே வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கிரிக்கெட் பேட்டால் தாக்குதல்

பின்னர், விடுதியில் இருந்த கிரிக்கெட் பேட்டை எடுத்த மாதவ் மாட்லே மாணவர்களை விரட்ட முயற்சித்துள்ளார். இதனால் விடுதி உரிமையாளருக்கும், மதுபோதையில் இருந்த 2 மாணவர்களுக்கும் இடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரமடைந்த கல்லூரி மாணவர்கள் இருவரும் மாதவ் மாட்லேவை தாக்கினர். பின்னர், மாதவ் மாட்லேவிடமிருந்த கிரிக்கெட் பேட்டை பறித்த மாணவர்கள், அதேபேட்டால் மாதவ் மாட்லேவை சரமாரியாக தாக்கினர்.

உயிரிழப்பு

மதுபோதையில் இருந்த மாணவர்கள் தாங்கியதில் படுகாயமடைந்த மாதவ் மாட்லேவை மீட்ட அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாதவ் மாட்லேவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி சில மணிநேரங்களில் உயிரிழந்தார்.

கைது

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மதுபோதையில் விடுதி உரிமையாளரை கிரிக்கெட் பேட்டால் அடித்துக்கொன்ற கல்லூரி மாணவர்களான ராகேஷ் மற்றும் டான் பிரைட்சன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com