கர்நாடகத்தில், 3 தொழில்வழி பொருளாதார நெடுஞ்சாலைகள்: மந்திரி முருகேஷ் நிரானி

கர்நாடகத்தில் 3 தொழில் வழி பொருளாதார நெடுஞ்சாலைகள் அமைய உள்ளதாக தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கூறியுள்ளார்.
கர்நாடகத்தில், 3 தொழில்வழி பொருளாதார நெடுஞ்சாலைகள்: மந்திரி முருகேஷ் நிரானி
Published on

நல்ல வாய்ப்புகள்

பெங்களூருவில் இந்திய குடியரசின் பவள விழா கொண்டாட்டம் கர்நாடக தொழில் வளர்ச்சி வாரியம் சார்பில் நடைபெற்றது. இதில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி கலந்து கொண்டு, பேசியதாவது:-

கர்நாடகத்தில் 3 தொழில்வழி பொருளாதார நெடுஞ்சாலைகள் அமைகின்றன. அதாவது சென்னை-பெங்களூரு, ஐதராபாத்-பெங்களூரு, மும்பை-பெங்களூரு ஆகிய 3 தொழில் வழி பாதைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது 3 பெரிய நகரங்களுடன் இணைக்கப்படுகிறது. அதனால் கர்நாடகத்தில் முதலீடுகள் செய்ய முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன. இதில் சென்னை-பெங்களூரு தொழில்வழி கர்நாடகத்திற்கு நல்ல முதலீடு வாய்ப்புகளை வழங்கும். இது கர்நாடகத்திற்கு ஒரு வெற்றி கதையாக அமையும்.

பெரிய பொருளாதார பலம்

கர்நாடகத்தில் ஆட்சி செய்த அனைத்து அரசுகளும், தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. முக்கியமான தொழில் முதலீட்டாளர்கள் கர்நாடகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டுகிறார்கள். கர்நாடகம் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 7.09 சதவீத வளர்ச்சி பெற்றுள்ளது. கர்நாடகம் 4-வது பெரிய பொருளாதார பலத்தை கொண்ட மாநிலம் ஆகும். மக்கள்தொகை அடிப்படையில் பார்த்தால் கர்நாடகம் 8-வது பெரிய மாநிலம் ஆகும்.

திறன்மிகு மனித வளத்தில் இருப்பதில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில் கர்நாடகம் முதல் இடத்தை பிடிக்கும் நிலையில் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளாக கர்நாடகம் அறிவுசார் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. 400-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி-வளர்ச்சி மையங்கள் உள்ளன. கர்நாடகத்தில் 700-க்கும் மேற்பட்ட பெரு நிறுவனங்கள் உள்ளன. இதில் 500 வெளிநாட்டு நிறுவனங்கள் செயல்படுகின்றன.

தொழில்நுட்ப தொழிற்பேட்டை

உலக அளவில் பெங்களூரு, 4-வது பெரிய தொழில்நுட்ப தொழிற்பேட்டை ஆகும். கர்நாடகத்தில் அதிக வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படுகின்றன. நாடு வளர்ச்சி பாதையில் செல்ல கர்நாடகம் மிக முக்கிய பங்காற்றுகிறது. நில சீர்திருத்தம், தொழில் கொள்கை, புதுமையை புகுத்துதல் மற்றும் பல்வேறு கொள்கைகள், அதிக தொழில் முதலீடுகளை ஈர்ப்பதாக உள்ளது.

இவ்வாறு முருகேஷ் நிரானி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com