கர்நாடக அரசியல்: இட்லி-சாம்பார், உப்புமாவுடன் முடிவுக்கு வந்த முதல்-மந்திரி பதவி மோதல்

கட்சி மேலிடம் என்ன கூறுமோ, அதனை பின்பற்றுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம் என சித்தராமையா கூறியுள்ளார்.
கர்நாடக அரசியல்: இட்லி-சாம்பார், உப்புமாவுடன் முடிவுக்கு வந்த முதல்-மந்திரி பதவி மோதல்
Published on

பெங்களூரு,

கர்நாடகத்தில் முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்-மந்திரியாக டி.கே.சிவக்குமார் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், டி.கே.சிவக்குமார் முதல்-மந்திரி பதவிக்கு வரவேண்டும் என்று அவருடைய தொண்டர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறும்போது, முதல்-மந்திரி மாற்றம் விவகாரத்தில் கட்சி தொண்டர்கள் வேண்டுமானால் ஆர்வமாக இருக்கலாம். நான் அவசரப்படவில்லை. கட்சி மேலிடம் உரிய முடிவு எடுக்கும். நான் டெல்லி செல்லலாம். அங்கு நிறைய பணிகள் உள்ளன. நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குகிறது. அதனால் கர்நாடக எம்.பி.க்களை சந்தித்து ஆலோசிக்க வேண்டும்.

கடவுளின் கருணையால் மேகதாது திட்டத்தில் கர்நாடகத்துக்கு நீதி கிடைத்துள்ளது. எம்.பி.க்களுடன் நீர்ப்பாசன திட்டங்கள் குறித்து விவாதிக்க வேண்டியுள்ளது. அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டுவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவுடன் ஆலோசிக்க உள்ளேன் என அவர் கூறினார்.

இந்நிலையில், இன்று காலை முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இருவரும் ஒன்றாக காலை உணவு சாப்பிட்டனர். இட்லி, சாம்பார், உப்புமாவுடன் காலை உணவு அமர்க்களப்பட்டது.

இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சித்தராமையா, கட்சி மேலிடம் என்ன கூறுமோ, அதனை பின்பற்றுவது என நாங்கள் முடிவு செய்திருக்கிறோம். நாளை முதல் எந்த குழப்பமும் இருக்காது. இப்போதும் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், சில ஊடக நிருபர்களே குழப்பம் விளைவித்து வருகின்றனர் என்று கூறினார். இதனால், கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தி வந்த முதல்-மந்திரி பதவிக்கான மோதல் முடிவுக்கு வந்துள்ளது என பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com