பொது இடங்களில் புகையிலை பயன்படுத்தி எச்சில் துப்பினால் ரூ. 1,000 அபராதம்.. கர்நாடகா அரசு அறிவிப்பு

கோப்புப்படம்
மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தும் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
பெங்களூரு,
கர்நாடக மாநிலத்தில் புகையிலை பொருட்கள் விற்பனை மற்றும் பயன்படுத்துவது தொடர்பான சட்டத்தில் அரசு திருத்தம் செய்திருந்தது. இந்த சட்ட திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். இதன் காரணமாக கர்நாடகத்தில் புகையிலை பொருட்கள் பயன்படுத்திவிட்டு பொது இடங்களில் எச்சில் துப்பினால், இதற்கு முன்பு ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் அந்த அபராத தொகையை கர்நாடக அரசு தற்போது ரூ.1,000 ஆக உயர்த்தி உள்ளது. இதன்படி இனிமேல் பொது இடங்களில் புகையிலை பயன்படுத்திவிட்டு எச்சில் துப்பினால், அவர்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும்.
அதுபோல், இதற்கு முன்பு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பீடி, சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இந்த சட்ட திருத்தம் மூலமாக இனிமேல் 21 வயது நிரம்பியவர்களுக்கு தான் மாநிலத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்ய முடியும்.
21 வயதுக்கு குறைவானவர்களுக்கு புகையிலை பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும். அதுபோல், கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ள 100 மீட்டர் சுற்றளவுக்கு உள்ள கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ய அனுமதி கிடையாது.
மேலும் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஹூக்கா பார்களுக்கு தடை விதித்தும் மாநில அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி இனிமேல் கர்நாடகத்தில் ஹூக்கா பார்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அரசின் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ஹூக்கா பார்கள் நடத்தினால், அவர்களுக்கு 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படுவதுடன், ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 30 அறைகள் அல்லது 30-க்கும் மேற்பட்டோருக்கான இருக்கைகள் கொண்ட ரெஸ்டாரண்ட்டுகளில் கண்டிப்பாக புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு என தனியாக இடவசதி அல்லது அறையை ஒதுக்க வேண்டும் என்றும் அரசு தனது அரசாணையில் தெரிவித்துள்ளது.






