

பெங்களூரு,
காவிரி நீரை பங்கிடுவதில் கர்நாடகா - தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக பிரச்சினை நிலவி வருகிறது. இந்த பிரச்சினையை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், தமிழகம் ,கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில் காவிரியில் இருந்து 29ம் தேதி முதல் (இன்று) தினமும் 3,500 கன அடி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீரை திறந்துவிடவில்லை.
இந்நிலையில், தமிழகத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறக்குமாறு காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு முறையீடு செய்ய உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு முறையீடு செய்ய உள்ளது.
கர்நாடகாவில் நீர் தேவை அதிகமாக இருப்பதால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலை தற்போது இல்லை என அம்மாநில அரசு கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.