

பெங்களூரு,
கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்த பிரதாப்சந்திரஷெட்டி நேற்று முன்தினம் தனது பதவியை ராஜினாமா செய்தார். பா.ஜனதா நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததை அடுத்து காங்கிரசை சேர்ந்த அவர் பதவியை விட்டு விலகினார். இதையடுத்து மேல்-சபை தலைவர் பதவி காலியாக உள்ளது.
இந்த மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தலை அறிவிக்குமாறு கவர்னர் வஜூபாய் வாலாவை கர்நாடக மந்திரிசபை கேட்டுக் கொண்டது. இதையடுத்து கவர்னர், மேல்-சபை தலைவர் பதவிக்கான தேர்தல் வருகிற 9-ந் தேதி நடைபெறும் என்றும், அதற்கான வேட்புமனு தாக்கல் 8-ந் தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார்.
75 உறுப்பினர்களை கொண்ட மேல்-சபையில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லை. அதனால் ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு ஆதரவு அளிக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது. அதன்படி ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் மேல்-சபை தலைவர் பதவிக்கு பசவராஜ் ஹொரட்டி நிறுத்தப்படுகிறார். ஆனால் அவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாது என்று கூறப்படுகிறது. அதனால் மேல்-சபை தலைவராக பசவராஜ் ஹொரட்டி போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது.