கர்நாடகா: ஜிப்லைனில் இருந்த பூட்டு அறுந்து 40 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்

கயிற்றில் தொங்கியபடி நடுவானில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவரது பாதுகாப்புப் பூட்டு திடீரென அறுந்தது.
கர்நாடகாவில் ஜிப்லைனில் ஈடுபட்டபோது பூட்டு அறுந்து குபேரா என்ற இளைஞர் 40 அடி உயரத்தில் இருந்து கிழே விழுந்தார்.
குபேரா சுரபுரா
Published on

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம், தண்டேலியில் இளைஞர் ஒருவர் ஜிப்லைன் சாகசத்தில் ஈடுபட்ட போது பூட்டு அறுந்து சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

விபத்து நடந்தது எப்படி?

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் குபேரா சுரபுரா (வயது 24) . இவர் தண்டேலியில் உள்ள 'ஸ்டெர்லிங் ரிவர் ரிசார்ட்' என்ற இடத்திற்கு சுற்றுலா சென்றார். இதையடுத்து அங்கிருந்த ஜிப்லைன் சாகச விளையாட்டில் அவர் ஈடுபட்டார்.

கயிற்றில் தொங்கியபடி நடுவானில் சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அவரது பாதுகாப்பு பூட்டு திடீரென அறுந்தது. இதனால் நிலைதடுமாறிய அவர், சுமார் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார்.

தீவிர சிகிச்சை

கீழே விழுந்ததில் அந்த இளைஞரின் கை, கால்களில் பலத்த எலும்பு முறிவுகளும், நரம்பு மண்டல பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளன. தண்டேலியில் முதலுதவி அளிக்கப்பட்ட பின், அவர் மிராஜ் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் குற்றச்சாட்டு

ரிசார்ட் நிர்வாகத்தின் முறையற்ற பராமரிப்பு மற்றும் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என வாலிபரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ஆரம்பத்தில் மருத்துவச் செலவுகளை ஏற்பதாகக் கூறிய ரிசார்ட் நிர்வாகம், தற்போது ஏமாற்றுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். விபத்து நடந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com